×

நாளை தமிழக பட்ஜெட் : நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்தியாகராஜன் தாக்கல் செய்கிறார்..! முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபின் முதல் நிதிநிலை அறிக்கை

சென்னை: தமிழக அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நாளை தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு தாக்கலாகும் முதல் நிதிநிலை அறிக்கை ஆகும்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோது தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது. எனவே, கொரோனா ஒழிப்பு பணிகளில் முதல்வர் தீவிரம் காட்டினார். மேலும், நாள் தோறும் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து கொரோனா பரவலை குறைக்கவும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது. இந்தநிலையில், கடந்த ஜூன் 21ம் தேதி 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அதில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், முதல் முறையாக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தின் 2021-2022ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்வதற்கான பணிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தினசரி, ஒவ்வொரு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் முதல்வர் ஆலோசனை நடத்தி வந்தார். இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 4ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 2021-2022ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் 13ம் தேதி தமிழக சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டம் வருகிற 13ம் தேதி (நாளை) காலை 10  மணிக்கு சென்னை, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும்.

 அன்றைய தினம், 2021-2022ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையினை  பேரவைக்கு அளிக்க வேண்டும் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் என தமிழக சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் அறிக்கை வெளியிட்டார். இதேபோல், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து  சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று முன்தினம் அலுவல் ஆய்வு குழு  கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஆகஸ்ட் 13ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 21ம் தேதி வரை  மொத்தம் 29 நாட்கள் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு சென்னை, சேப்பாக்கம் வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

சட்டப்பேரவையில் பங்கேற்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், சட்டப்பேரவை ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருப்பவர்கள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தில் அனுமதிக்கப்படுவார்கள். நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நாளை சட்டப்பேரவையில் 2021-2022ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்கிறார். அடுத்த நாள், 14ம் தேதி (சனிக்கிழமை) வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதன்படி,  பொது மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு வருகிற  திங்கள் கிழமை முதல் வியாழன் கிழமை வரை 4 நாட்கள் விவாதம் நடைபெறும்.  இதைத்தொடர்ந்து வருகிற 23ம் தேதி மானிய கோரிக்கைகள் மீது விவாதம்  நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் பொதுமக்களிடம் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த பட்ஜெட்டில், தேர்தல் பிரசாரத்தின்போது திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு மக்கள் நல திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும், தமிழக பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்த அறிவிப்புகளும் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த கூட்டத்தொடரில், ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டத்திற்கு எதிராகவும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு உள்ளிட்ட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

Tags : TN ,PDR Palaniveltiyagarajan ,Stalin , Tamil Nadu budget tomorrow: Finance Minister PDR Palaniveldiyakarajan will file ..! The first financial statement since the inauguration of MK Stalin as Chief Minister
× RELATED நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை