×

வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் அருகே புதுப்பொலிவுடன் சீரணி கலையரங்கம்

*எம்எல்ஏ பூண்டிகலைவாணன் உத்தரவையடுத்து பேரூராட்சி நடவடிக்கை

வலங்கைமான் : வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 1973ம் ஆண்டு அமைக்கப்பட்ட கலையரங்கம் கடந்த சில ஆண்டுகளாக புனரமைக்கப் படாத நிலையில் திருவாரூர்சட்ட மன்ற உறுப்பினரின் உத்தரவிற்கிணங்க பேரூராட்சியின் மூலம் புனரமைக்கப்பட்டது .

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட மகாமாரியம்மன் கோயில் எதிரே 1973ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் திமுக தலைவர் கருணாநிதியின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு சீரணி கலையரங்கம் அமைக்கப்பட்டது.கலையரங்கம் அமைக்கப்பட்டு 50வது ஆண்டு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இக்கலையரங்கில் அரசியல் கூட்டங்கள் ,சமூக விழிப்புணர்வு நாடகங்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.

இவ் வரலாற்று சிறப்புமிக்க சீரணி கலையரங்கம் பல ஆண்டுகளாக புனரமைக்க படாமல் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த வாரம் வலங்கைமான் பேரூராட்சி பகுதிகளில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைப்பது தொடர்பான ஆய்வு பணியைமேற்கொள்ள திமுக மாவட்டச் செயலாளரும் திருவாரூர் எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் வந்தபோது போதிய பராமரிப்பு இன்றி இருந்த சீரணி கலை அரங்கத்தை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார் .

அப்போது திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பரசன். தட்சிணாமூர்த்தி நகர செயலாளர் சிவனேசன் மற்றும் பேரூராட்சி வார்டு செயலாளர்கள்  உடனிருந்தனர். இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் சீரணி கலை அரங்கத்திற்கு தரைத்தளத்தில் டைல்ஸ்கள் பதித்து மேலும் வர்ணங்கள் பூசி புனரமைப்பு பணிகளை மேற்கொண்டது.அதனை அடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு சீரணி கலையரங்கம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் விழாவிற்கு முன்னதாக புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்திருவாரூர் எம்எல்ஏ மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


Tags : Sirani Gallery ,Valangaiman Maha Mariamman Temple , Valangaimaan, Kaliyarangam,Newly renovated
× RELATED வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை