திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் தாமிரபரணி ஆற்றின்கரையில் ₹56.40 லட்சம் செலவில் பக்கசுவர்

*இந்து சமய அறநிலைய துறை பொறியாளர் ஆய்வு

மார்த்தாண்டம் :  கன்னியாகுமரி மாவட்டத்தின் பனிரெண்டு சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயம் திக்குறிச்சி மகாதேவர் கோயில். இது தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது.  இங்கு தினமும் ஏராளமான பக்தர்களும், பிரதோஷம், திருவாதிரை, மாதசிவராத்திரி உட்பட தினங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், மகா சிவராத்திரி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்களும் இங்குள்ள படிதுறையில் புனித நீராடி மகாதேவரை தரிசனம் செய்வர்.

பயணம்-வள்ளகடவு  இணைப்பு பாலப் பணிகள் நடந்த பின் ஆற்றின் நீரோட்டம் மாறி கோயில் சுற்றுச்சுவரோடு சேர்ந்து பாய்கிறது.  கோயில் பாதுகாப்பிற்காக இருந்த  மண்திட்டு தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிறிது சிறிதாக அடித்து செல்லப்பட்டது. தற்போது கோயில் சுற்றுச்சுவர்  இடிந்து விழும் நிலையில் உள்ளது. சுற்றுச்சுவர் இடிந்தால் கோயிலுக்கும் பாதிப்பு ஏற்படும் .  பக்தர்கள் பல ஆண்டுகளாக இந்த பகுதியில் பக்கச்சுவர் கட்ட கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்தநிலையில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு, தகவல்தொழில்நுட்பதுறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் அதிகாரிகள் இங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அமைச்சர் சேகர்பாபு ,  பொதுப்பணிதுறைக்கு ஆய்வறிக்கை தயார் செய்து பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டார். பொதுப்பணிதுறை சார்பில் ₹56.40 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வறிக்கை தயார் செய்யபட்டது.

இந்த  நிலையில் இந்து சமய அறநிலைய துறை மதுரை  மண்டல செயற்பொறியாளர் வெண்ணிலா தலைமையில் கன்னியாகுமரி தேவசம் செயற்பொறியாளர் ராஜ்குமார், முப்பந்தல்  கோயில் கூடுதல் பொறுப்பு செயல் அலுவலர் சண்முகம், அய்யப்பன் உட்பட அதிகாரிகள் இறுதி ஆய்வறிக்கை தயார் செய்ய   நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது படித்துறையில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக  தடுப்பு வேலியும்,  பக்கசுவர் அமையும் பகுதியில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக தடுப்பு வேலி அமைப்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யப்பட்டது.  கோயில் பாதுகாப்பை கருதி வரும் மழைக்காலம் முன் பணிகளை தொடங்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: