×

ஆண்டிபட்டியில் கத்தரிக்காய் விலை கடும் வீழ்ச்சி

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதிகளில் கத்தரிக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றியுள்ள பகுதிகளான சில்வார்பட்டி, டி.புதூர், வெள்ளையத்தேவன்பட்டி, அணைக்கரைப்பட்டி, மூனாண்டிபட்டி, நடுப்பட்டி, புள்ளிமான் கோம்பை, அமச்சியாபுரம், அரப்படிதேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் கத்தரிக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த பகுதிகளில் விளைவிக்கப்படும் கத்தரிக்காய்கள் ஆண்டிபட்டியில் உள்ள காய்கறி மொத்த மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து திண்டுக்கல், மதுரை, சென்னை போன்ற வெளிமாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது தேனி மாவட்டத்தில் அடிக்கடி பரவலாக மழை பெய்து வருவதால் கத்தரிக்காய் விவசாயம் சீராக நடைபெற்று வந்தது. கத்தரிக்காய் விவசாயத்தில் சாகுபடி அதிகரித்துள்ள நிலையில், மார்க்கெட்டில் விலை மிகவும் குறைவாகவே எடுக்கப்படுகிறது. கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக அடிக்கடி ஊரடங்கு விதித்து வரும் நிலையில், காய்கறிகளை கொண்டு செல்வதில் சிரமம் அடைந்துள்ளதால் கத்தரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் ஆண்டிபட்டி காய்கறி மொத்த மார்க்கெட்டில் கத்தரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில், தற்போது 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கத்தரிக்காய் சாகுபடி செய்த விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், நல்ல விலையில் விற்பனை செய்து வந்த கத்திரிக்காய் தற்போது விலை குறைவாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கத்தரிக்காயில் கொண்டை புழு நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் விளைச்சல் செய்த கத்திரிக்காய்களில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், பாதியளவு கத்திரிக் காய்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கத்தரிக்காய் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அரசு போதிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Andipatti , Andiaptty, Eggplant, Farmers, price low
× RELATED ஆண்டிபட்டி அருகே மண் திருடிய மர்ம...