தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அறநிலையத்துறையின் நடவடிக்கைகளை அனைத்து மதத்தினரும் பாராட்டுகின்றனர்: பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

காஞ்சிபுரம்: சிறுபான்மையினர் மக்களின் மேம்பாட்டுக்கான கருத்துக்கேட்பு மற்றும் ஆய்வு கூட்டம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்தார், ஆணைய உறுப்பினர் செயலர் துரை ரவிச்சந்திரன், எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், செல்வபெருந்தகை, எஸ்பி சுதாகர், மாவட்ட வருவாய் அலுலவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை அரசிடம் தெரிவிப்பதற்கும், அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மக்களிடம் சென்று அடைகிறதா என்பதை பார்ப்பது இந்த ஆணையத்தின் செயல்பாடு. தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற சிறுபான்மையின மற்றும் மொழி சார்பற்ற சிறுபான்மையினர் என 40 விழுக்காடு மக்கள் வாழ்கிறார்கள். ஜனநாயகத்தின் தரம் என்பது, ஒரு நாட்டில் உள்ள சிறுபான்மையினர் தங்களது வாழ்க்கையை சிறப்பாக, பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக, சந்தோஷமாக வாழ்வது ஆகும்.

பெரும்பான்மையாக உள்ள மக்களோடு இனக்கமாக வாழ வேண்டும். மத நல்லிணக்கத்தோடு செயல்பட வேண்டும். மற்ற மதத்தினரை மதிக்க வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அறநிலையத்துறையின் நடவடிக்கைகளை அனைத்து மதத்தினரும் பாராட்டுகின்றனர். நாம் எந்த மதம் என்பதைவிட அனைவரும் தமிழன் என்ற அடையாளம் காண்போம். தமிழர்களாக ஒற்றுமையுடன் இருப்போம். தமிழர்களாய் எழுந்து நிற்போம் என்றார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவி, காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.நெடுஞ்செழியன்,  மாவட்ட தலைவர்கள் காஞ்சிபுரம் அளவூர்நாகராஜன், செங்கல்பட்டு தெற்கு சுந்தரமூர்த்தி, செங்கல்பட்டு வடக்குசெந்தில்குமார், திமுக நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், நிர்வாகிகள் பி.எம்.குமார், தசரதன், யுவராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் செந்தில், பத்மநாபன், ஆர்.வி.குப்பன், அவலூர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>