கொரோனாவுக்கு எதிராக அதிக எதிர்ப்பு திறன் கோவிஷீல்டு, கோவாக்சினை கலந்து பயன்படுத்த ஆய்வு: ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி:  கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் அடுத்தடுத்த அலைகள் ஏற்பட்டு மிகுந்த அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளன. இதனால்,  தடுப்பூசி போடும் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துவரும் கோவாக்சின் தடுப்பூசி, சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு ஆகியவற்றின் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில், முதல் டோஸ் ஒரு தடுப்பூசி, 2வது டோஸில் வேறு ஒரு தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும், கொரோனா வைரசுக்கு எதிராக சிறந்த பலனை தருவதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து. ஒரே தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களை காட்டிலும் இரண்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்திக்கொண்டவர்களின் நோயெதிர்ப்பு திறன் அதிகமாக  இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் கோவிஷீல்டு, கோவாக்சின் கலந்து போடுவது பாதுகாப்பானது என்றும், ஒரே தடுப்பூசியை செலுத்திக் கொள்வதால் ஏற்படும் பாதகமான விளைவுகளும் ஒரே மாதிரி இருப்பதும் தெரிய வந்தது.

 இந்நிலையில், கோவாக்சின்  மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது தொடர்பாக  ஆய்வு நடத்துவதற்கு அனுமதிக்குமாறு கடந்த மாதம் 29ம் தேதி இந்திய  மருந்து தர கட்டுப்பாடு ஆணையத்தின் நிபுணர்கள் குழு பரிந்துரை செய்து இருந்தது. இதனை தொடர்ந்து,  கோவாக்சின்  மற்றும் கோவிஷீல்டு  தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு மருந்து கட்டுப்பாடு ஆணையம்  அனுமதி வழங்கி இருக்கிறது. வேலூரில் இருக்கும் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரியான சிஎம்சி மருத்துவமனை இந்த ஆய்வை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories:

>