மேகதாது அணை ஆய்வுக்குழுவை கலைத்த விவகாரம்; தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

புதுடெல்லி: காவிரியின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி செலவில், மேகதாதுவில் கர்நாடகா அரசு புதிய அணை கட்ட முயற்சி செய்கிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இத்திட்டம் பற்றி நாளிதழில் வந்த செய்தியை அடிப்படையாக கொண்டு வழக்கு பதிவு செய்த சென்னையில் உள்ள தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், மேகதாதுவில் சட்டத்திற்கு புறம்பாக கர்நாடகா அரசு அணை கட்டுகிறதா என்று ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட குழுவை அமைத்து கடந்த ஏப்ரல் 15ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வு, தென்மண்டல தீர்ப்பாயம் அமைத்த 13 பேர் கொண்ட குழுவை கலைக்கும்படி கடந்த ஜூன் 18ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மூத்த வழக்கறிஞர்கள் குமணன், உமாபதி தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் கூறியிருப்பதாவது: மேகதாதுவில் அணை கட்டுகிறோம் என்ற பெயரில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது.

அதற்கான ஆதாரங்களை அடிப்படையாக கொண்டுதான், சென்னையில் உள்ள தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் 13 பேர் கொண்ட ஆய்வு குழுவை அமைத்தது. இது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால், அணை தொடர்பான ஆய்வு மேற்கண்ட இந்த குழு, தனது அறிக்கையை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் இக்குழுைவ கலைத்தது ஏற்கக்கூடியது அல்ல. மேகதாது அணை திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, அதன் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதனால், இந்த விவகாரத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அடிப்படை கொள்கையை அவர்களே மீறி செயல்பட்டு இருப்பதோடு, 2018ல் வழங்கப்பட்ட உத்தரவை கர்நாடகா தொடர்ந்து மீறி செயல்பட்டு வருவதையும் கருத்தில் கொள்ளாமல் இருந்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் மேகதாது அணை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் எப்படி இடைக்காலமாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்க முடியும்? எனவே, அதற்கான அதிகாரமும் அதற்கு கிடையாது. எனவே, 3 பேர் குழுவை கலைத்து அது பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவையும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>