×

மாநிலங்களவையிலும் ஓபிசி மசோதா நிறைவேறியது: ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு

புதுடெல்லி: மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் ஓபிசி அரசிலயமைப்பு சட்ட திருத்த மசோதா நேற்று நிறைவேறியது. இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஓபிசி பட்டியல் தயாரிக்கும் அதிகாரம் மீண்டும் மாநில அரசுகளுக்கே கிடைத்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு 102வது சட்ட திருத்தத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் சாதிகளை சேர்க்கும் அதிகாரம் மாநிலங்களிடமிருந்து பறிக்கப்பட்டு ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டது.

இந்த விவகாரம் மராத்தா இடஒதுக்கீடு வழக்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் சர்ச்சையானது. மாநில அரசின் அதிகாரத்தை பறித்த ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, ஓபிசி பட்டியலை தயாரிக்கும் உரிமையை மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்கிட அரசியலமைப்பு சட்டத்தை திருத்த ஒன்றிய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக, அரசியலமைப்பு 127வது சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவை எதிர்க்கட்சிகள் ஒருமனதாக ஆதரவளிப்பதாக ஆரம்பத்திலேயே தெரிவித்தன. மக்களபையில் நடந்த ஓட்டெடுப்பில் 385 எம்பிக்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் நேற்று ஓபிசி மசோதா தாக்கல் செய்தார். இதில் விவாதம் நடத்தி ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. 185 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தனர். யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது. இரு அவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டதும், 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஓபிசி பட்டியலில் சாதிகளை சேர்க்கும் அதிகாரம் மாநிலங்களுக்கே திரும்ப கிடைத்திடும்.

Tags : OBC , Statewide OBC Bill Passed: Deposit for Presidential Approval
× RELATED பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர்...