×

நோபல் பரிசு பெறும் வகையில் அண்ணா பல்கலையில் மாற்றம்: துணை வேந்தர் பேட்டி

சென்னை: வரும் 20 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் நோபல் பரிசு பெறும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்று துணை வேந்தர் பேராசிரியர் வேல்ராஜ் தெரிவித்தார். அண்ணா பல்கலைக் கழகத்தின் 11வது துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் வேல்ராஜ், நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைமுறையில் இருந்து வரும் பாடத்திட்டம், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக இல்லை. தற்போதுள்ள பாடத்திட்டத்தின் பாடப் பொருளை 20 சதவீத மாணவர்கள் மட்டுமே புரிந்து நன்கு படிக்க முடியும். மற்றவர்கள் அதை படிக்க சிரமப்படுவதாக தெரிகிறது.

அதனால் மற்ற 80 சதவீத மாணவர்களும் அவர்களுக்கே உள்ள திறமையின் அடிப்படையில் பாடங்களை கற்கும் வகையில் பாடத்திட்டங்கள் இரண்டு வகையாக பிரித்து மாற்றி அமைக்கப்பட உள்ளது. அரசு சொல்கின்றபடி, இனி வரும் நாட்களில் அரசின் கருத்துகளை கேட்டு அண்ணா பல்கலைக் கழகம் செயல்படும். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் 20 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக் கழக மாணவர்களும் நோபல் பரிசு பெறுவற்கு ஏற்ப இப்போதே பாடங்களில் மாற்றங்கள் கொண்டு வர உள்ளோம். அதற்கான விதை இப்போதே ஊன்றப்படும். இவ்வாறு துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.

Tags : Anna University ,Vice Chancellor , Change at Anna University to receive the Nobel Prize: Interview with Vice Chancellor
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...