முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை எதிரொலி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் அவசர ஆலோசனை

* ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்தும் முக்கிய முடிவு

* கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை அடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில், 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.

கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அது மட்டுமல்லாமல் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிட்டுள்ளது. இப்போது நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும். வெற்றி ஒன்றையே  குறிக்கோளாக கொண்டு பணியாற்ற வேண்டும் என்று அப்போது அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. அது மட்டுமல்லாமல் நேற்றும் 2வது நாளாக  சோதனை நடைபெற்றது. இந்த சோதனை தொடர்பாக அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. ஏற்கனவே, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர்கள் பலர் வீடுகளில் சோதனை நடத்தப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் நேற்று முன்தினம் இரவு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை எஸ்.பி.வேலுமணி தனித்தனியாக சந்தித்து பேசினார். மேலும், அதிமுக மூத்த தலைவர்களையும் வேலுமணி சந்தித்து பேசினார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இன்று திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடக்கிறது.

* மதுசூதனனுக்கு இரங்கல்

ஆலோசனை கூட்டத்தில் மறைந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், அதிமுக ஒரு மகத்தான மக்கள் தொண்டரையும், எம்ஜிஆர் மீது மாறாப் பற்றுகொண்ட மாவீரரையும் இழந்திருக்கிறது. அதிமுகவை கட்டிக் காப்பதிலும், தொண்டர்களுக்காக வாழ்வதிலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில் நடைபோட்டு, மக்கள் தொண்டாற்றுவதிலும் அவைத் தலைவர் மதுசூதனன் காலமெல்லாம் எடுத்துக்காட்டாய் திகழ்வார்.மதுசூதனனுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, இந்த இரங்கல் தீர்மானத்தை உளம் உருக நிறைவேற்றுகிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 நிமிடம் மவுன் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கிடையில், மதுசூதனன் மருத்துவச் சிகிச்சைக்காக ரூ.26.74 லட்சம் அதிமுக சார்பில் அப்போலோ மருத்துவமனைக்கு செலுத்தப்பட்டுள்ளது என அதிமுக தலைமை கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>