ஆத்தூர் தாலுகா ஆபீசில் பரபரப்பு அதிமுக எம்எல்ஏவை பெண்கள் முற்றுகை

ஆத்தூர்: ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏவை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெய்சங்கர். இவர் நேற்று ஆத்தூரில் நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர், அருகில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி ஆபீஸ்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு, தாசில்தாரிடம் மனு கொடுக்க காத்திருந்தனர்.

அவர்களை கண்டுகொள்ளாமல் சென்ற எம்எல்ஏவை பார்த்த பெண்கள், தாசில்தார் அலுவலக வாசலில் அவரை முற்றுகையிட்டு, தங்களுக்கு வீட்டுமனை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோஷமிட்டனர். இதனால், எம்எல்ஏ அவர்கள் பக்கம் திரும்பி வந்தார். அவர்களிடம், கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தால், கலெக்டரிடம் பேசி  தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ ஜெய்சங்கர் உறுதி கூறினார். இதனையடுத்து, முற்றுகையை கைவிட்டு பெண்கள் அவரிடம் மனுவை கொடுத்தனர். பின்னர், மற்றொரு மனுவை தாசில்தார் வரதராஜனிடமும் வழங்கினர். அதிமுக எம்எல்ஏவை பெண்கள் திடீரென முற்றுகையிட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: