×

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை தொடர்ந்து திருச்செந்தூரில் வேலுமணி திடீர் யாகம்

தூத்துக்குடி: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று திருச்செந்தூரில் பரிகார பூஜை மற்றும் சத்ரு சம்ஹார யாகத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது பினாமிகள் வீடு உட்பட பல இடங்களில் நேற்றுமுன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு எம்எல்ஏ ஹாஸ்டலில் இருந்து புறப்பட்ட வேலுமணி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு உதவியாளர் ராதாவுடன் நேற்று காலை வந்தார். பிஎம்டபிள்யூ சொகுசு காரில் அவர்கள் ஏறிச் சென்றனர். அவர்கள் எங்கு சென்றனர் என உளவுத்துறையினர் ஒரு பக்கம், போலீசார் ஒரு பக்கம் என விசாரித்தனர்.

இந்நிலையில் மாலை 3.30 மணியளவில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் ஆவின் சின்னத்துரையுடன் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு மீண்டும் வேலுமணி வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், எங்கள் தலைவர்கள் அனுமதியுடன் எல்லா பிரச்னைகளையும் சட்டரீதியாக சந்திப்பேன். நேற்று முன்தினம் மதியமே கோயிலுக்கு வருவதாக இருந்தது. ஆனால் விசாரணை காரணமாக வர முடியவில்லை. எனவே தற்போது வந்துள்ளேன். எங்கள் கட்சி தலைவர்கள் அறிக்கைகள் கொடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அனுமதி பெற்று விரைவில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பேன் என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக திருச்செந்தூர் சன்னதி தெருவில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்திற்கு வேலுமணி சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே அவரது குடும்பத்தினர் கோவையில் இருந்து கார் மூலம் வந்து காத்திருந்துள்ளனர். அங்கு நடந்த பரிகார பூஜை மற்றும் சத்ரு சம்ஹார யாகம் ஆகியவற்றில் வேலுமணி கலந்து கொண்டு விட்டு, விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றதாகவும், அவரது குடும்பத்தினர் தனியாக கார் மூலம் கோவை புறப்பட்டு சென்றனர் என்றும், இதற்காக திருச்செந்தூரை சேர்ந்த ஒரு விஐபி உதவி செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த மடத்தின் சார்பில், இங்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் பூஜைகளே நடந்தது. அதற்கு பின்னர் எதுவுமே நடக்கவில்லை என தெரிவித்துள்ளனர். லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு களேபரத்திற்கு மத்தியில் வேலுமணி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து  சென்றதன் மர்மம் என்ன என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* முக்கிய ஆவணங்களை எடுத்து வந்தாரா?
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பேட்டியின் போது கோயிலுக்கு சென்று வந்ததாக தெரிவித்தார். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து பெரிய கோயில்களும் மூடப்பட்டன. திருச்செந்தூரிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை. எனவே மூடப்பட்ட கோயிலில் முன்னாள் அமைச்சர் எப்படி தரிசனம் செய்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று திருச்செந்தூர் செல்வதாக கூறிச் சென்ற எஸ்.பி.வேலுமணி, தூத்துக்குடியில் இருந்து தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிக்கு சென்றதாகவும், அங்கு முக்கிய பிரமுகரை சந்தித்ததாகவும்  அவரிடம் தான் பையில் வைத்திருந்த முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக கொடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

Tags : Velumani ,Thiruchendur , Velumani sudden sacrifice in Thiruchendur following bribery probe
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...