×

ராஜதானி ரயிலை நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிக்க வேண்டும்: தென்மாவட்டங்களுக்கு அதிவேக ரயில்கள் வருமா?: எதிர்பார்ப்பில் ரயில் பயணிகள்

நாகர்கோவில்: தமிழ்நாடு 1,30,058 சதுரகி.மீ. பரப்பளவும், சுமார் 8 கோடி மக்கள் தொகையும் கொண்ட மாநிலமாகும். இதில் சுமார் 2 கோடி பேர் தென்மாவட்டங்களில் வசிக்கின்றனர். மாநில தலைநகர் வடஎல்லையில் அமைந்துள்ளதால் மற்ற மாவட்ட மக்கள் தலைநகருக்கு மிக அதிக தூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக குமரி, நெல்லை, துத்துக்குடியை சேர்ந்தவர்கள் தலைநகருக்கு வர ஒரு இரவு முழுவதும் ரயிலில் பயணிக்க வேண்டும்.  தமிழ்நாட்டில் மொத்தம் 3846 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதைகள் உள்ளது. அனைத்து மாவட்டங்களை இணைக்கும் வகையிலும், வட இந்தியா வரை பெரும்பாலான மாநிலங்களுக்கும் ரயில் சேவை உள்ளது. பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டாலும் தென் மாவட்டங்களுக்கு ரயில்வேயின் அனைத்து சேவைகளும் கிடைக்கவில்லை. ஆகவே ரயில்வே வளர்ச்சியிலும், ரயில்கள் இயக்கத்திலும் மிகவும் பின்தங்கியே உள்ளன. இந்தியாவில் கடந்த 2020ல் தொடங்கப்பட்ட வந்தேபாரத் ரயில் மினிபுல்லட் ரயில் என்று கூறப்படுகிறது. வழக்கம்போல் இந்த ரயில் வட இந்தியாவில் துவங்கப்பட்டது. இதுபோன்ற அதிவேக ரயில்கள் தென்னிந்தியாவில் இயக்கப்பட்டால் சென்னையை மையமாக வைத்து பெங்களுர் அல்லது கோவைக்கு இயக்கப்படும். இந்த வந்தேபாரத் ரயிலால் முழு தமிழ்நாடும் பயன்பட வேண்டுமானால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு வந்தேபாரத் ரயில்-18 பெட்டிகள் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த ரயிலை தென்மாவட்டங்களுக்கு இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுடில்லியிருந்து மாநிலங்களின் தலைநகருக்கு இயக்கப்படும் முழு குளிர்சாதன வசதி கொண்ட அதிவேக ரயில் ராஜதானி எக்ஸ்பிரஸ். மொத்தம் 24 ராஜதானி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்துக்கு என்று இயக்கப்படும் ராஜதானி ரயில் சென்னையில் இருந்து புறப்பட்டு தமிழக எல்லைக்குள் வெறும் 50 கி.மீ. மட்டுமே பயணம் செய்கிறது. பின்னர் ஆந்திரா மாநில எல்லைக்குள் சென்று விடுகின்றது. இதில் ஒரு ரயிலை வாராந்திர ரயிலாக கன்னியாகுமரி வரை அல்லது நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஏழைகள், நடுத்தர மக்களுக்காக லல்லுபிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது கரீப்ரதம் என்ற ரயில் இயக்கப்பட்டது. தமிழகத்திற்குள் இந்த ரயில் 50 கி.மீ. மட்டுமே இயக்கப்படுகிறது. ஆனால் கேரளவில் 2 ரயில்களை பெற்று மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வழியாக இயக்கப்படுகிறது. இதுபோல் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் சென்னையிலிருந்து புதுடில்லிக்கு இயக்கப்படும் இந்த ரயிலை மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.

சாதாரண பயணிகளும் பகல் நேரத்தில் அதிவேகமாக செல்வதற்காக ஜனசதாப்தி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் சதாரண நடுத்தர பயணிகள் பயணிக்கும் வகையில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். தமிழகத்தில் ஜனசதாப்தி ரயில் கோவை-மைலாடுதுறை, சென்னை-விஜயவாடா ஆகிய இரண்டு தடத்தில் மட்டுமே இயக்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் இது போன்ற எந்த ஒரு ரயிலும் இதுவரை இயக்கப்படவில்லை. ஆகவே நாகர்கோவிலிருந்து மதுரை, பொள்ளாச்சி வழியாக கோயம்பாத்தூருக்கும், பெங்களுரிலிருந்து நாமக்கல் வழியாக மதுரை அல்லது திருநெல்வேலிக்கும் ஜனசதாப்தி ரயில் இயக்க வேண்டும். சதாப்தி ரயில் தற்போது சென்னை-கோவை, சென்னை-பெங்களுர், சென்னை-மைசூர் ஆகிய தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றது. இது போன்ற ரயில்கள் கூடுதல் தமிழக பயணிகள் பயன்படும் விதத்தில் இயக்க வேண்டும். சென்னை சென்ட்ரலில் இருந்து காட்பாடி, சேலம், நாமக்கல், வழியாக மதுரைக்கு இயக்கலாம் என்ற ஆலோசனையும் வைக்கப்படுகின்றது. இந்த வழித்தடம் மதுரையிலிருந்து விழுப்புரம் வழியாக செல்வதை காட்டிலும் வெறும் 60 கி.மீதான் கூடுதலாக உள்ளது. இதனால் பயணநேரத்தில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது. ஆனால் திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், காட்பாடி போன்ற பகுதிகள் பகல்நேரத்தில் மதுரையுடன் அதிவேக ரயில்இணைப்பு கிடைக்கும். இரண்டாவது ரயிலாக பெங்களுரிலிருந்து காலையில் புறப்பட்டு மதுரைக்கு மதியம் வந்து சேருமாறும் இயக்கலாம் என்ற பரிந்துரையும் வைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து கன்னியாகுமரி, தூத்துக்குடிக்கு 2014 முதல் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால் இதுவரை மெமு ரயில்கள் இயக்கவில்லை. தற்போது மதுரை கோட்டத்தில் திருநெல்வேலி  திருச்செந்தூர், திருநெல்வேலி  செங்கோட்டை, விருதுநகர் - செங்கோட்டை, திண்டுக்கல் - பொள்ளாச்சி, மதுரை  ராமேஸ்வரம், செங்கோட்டை  கொல்லம் போன்ற வழித்தடங்கள் மின்மயமாக்கல் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும இந்த தடங்களில் தற்போது இயங்கும் சதாரண ரயில் பெட்டிகளை மாற்றி விட்டு மெமு ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது சென்னையிலிருந்து மதுரைக்கு தேஜாஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயிலும் அந்தோதையா ரயில் போன்ற தென்மாவட்டத்துக்கு வந்த ரயில் ஆகும். ஆனால் இந்த ரயில் மதுரையுடன் நின்றுவிடுகின்றது. மதுரைக்கு தெற்கே உள்ள பயணிகள் பயன்படுத்தும் விதத்தில் இந்த தேஜாஸ் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் என்பது நெல்லை மாவட்ட பயணிகளின் கோரிக்கையாகும். அந்தோதையா என்ற முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட 2 ரயில் தென்மாவட்டங்களுக்காக அறிவிக்கப்பட்டன. இதில் ஒன்று நாகர்கோவில் - தாம்பரம் தடத்தில் இயக்கப்படுகிறது. இரண்டாவது ரயில் அறிவிக்கப்பட்டும் இதுவரை இயக்கப்படவில்லை. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. இதைப்போல் கொச்சுவேலி  மங்களுர் அந்தோதையா ரயிலை நாகர்கோவில் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2 நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில்களை இன்டர்சிட்டி ரயில்கள் என்று கூறலாம் தென்மாவட்டங்களில் திருச்சிக்கும், திருவனந்தபுரத்துக்கும் இடையே இன்டர்சிட்டி ரயில் தற்போது இயக்கப்பட்டு வருகின்றது. இது போன்ற ரயில்கள் தமிழகத்துக்கு கூடுதலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிக அளவில் உள்ளது.


2011 கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை

* கன்னியாகுமரி-18,70,374
* திருநெல்வேலி, தென்காசி இணைந்து - 33,22,644
* தூத்துக்குடி-17,50,176
* விருதுநகர்- 19,42,288
* மதுரை-30,38,252
* ராமநாதபுரம்- 13,53,445
* சிவகங்கை-13,39,101
* தேனி- 12,45,899
* திண்டுக்கல்- 21,59,775
* புதுகோட்டை-16,18,345



Tags : Rajdhani ,Thiruvananthapuram ,Nagercoil ,Thenmavattam , Railway service
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!