×

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகிறாரா ராகுல் டிராவிட்?.. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!!

மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவி சாஸ்திரி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய அணிக்கு தற்போது பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், நவம்பர் மாதத்தில் பயிற்சியாளர் பதவியில் இருந்து தாம் விலகவிருப்பதாக பிசிசிஐயில் உள்ள தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிசிசிஐயுடனான ஒப்பந்தம் முடிவடைந்து வெளியேறுவதால் ரவி சாஸ்திரியுடன் இணைந்து பரத் அருண், ஸ்ரீதர், விக்ரம் ரத்தோர் ஆகியோரும் விலகவுள்ளதாகவும் தெரிகிறது.

இதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் என  கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ராகுல் டிராவிட், கடந்த 2019ம் ஆண்டிலிருந்து தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பொறுப்பை வகித்து வந்தார். அவரது பதவிக்காலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து டிராவிட் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பொறுப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ராகுல் டிராவிட் தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இலங்கை தொடரில் தற்காலிக தலைமைப்பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து அவர் தான் அடுத்த பயிற்சியாளர் என ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.



Tags : Rahul Travid ,Indian , ரவி சாஸ்திரி
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...