×

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய ‘இஓஎஸ்-03’ செயற்கைகோளின் ‘கவுன்ட் டவுன்’ தொடங்கியது: நாளை அதிகாலை ஏவப்படுகிறது

ஸ்ரீஹரிகோட்டா: ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் நாளை அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல் மற்றும் பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ‘இஓஎஸ்-03’ (EOS-3) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைகோள் 2,268 கிலோ எடை கொண்டது. இது, ‘ஜிஎஸ்எல்வி-எப்-10’ (GSLV F10) ராக்கெட்டில் பொருத்தப்பட்டு நாளை (ஆக. 12) அதிகாலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. அதற்கான 24 மணி நேர ‘கவுன்ட் டவுன்’ தொடங்கிவிட்டது.

முன்னதாக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், கொரோனா பரவல் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, நாளை திட்டமிட்டபடி ராக்கெட்டை விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணில் செலுத்தப்படும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் அதிநவீன மற்றும் சுறுசுறுப்பான பூமி கண்காணிப்பு செயற்கைக் கோள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை இஸ்ரோ வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஜிஎஸ்எல்வி-எஃப் 10/இஓஎஸ் -03 செயற்கைகோள் ஏவும் பணியை தொடங்குவதற்கான ‘கவுன்ட் டவுன்’ இன்று அதிகாலை 3.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (எஸ்டிஎஸ்சி) தொடங்கியது. மற்றொரு டுவிட்டில், ‘ஜிஎஸ்எல்வி-எஃப் 10-இன் இரண்டாம் நிலைக்கான (ஜிஎஸ்2) ஆக்சிஜனேற்றி நிரப்புதல் பணி முடிந்தது’ என்று காலை 6.30 மணியளவில் பதிவிட்டிருந்தது.

Tags : Sriharikota , Sriharikota, EOS-03
× RELATED வானிலை முன்னறிவிப்புகளின்...