×

கேரள முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!: சேலம் தனிப்படை போலீஸ் அதிரடி..!!

சேலம்: கேரள முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விமானப்படை முன்னாள் மருத்துவ உதவியாளர் சேலத்தில் கைது செய்யப்பட்டார். இரு வாரங்களுக்கு முன் சேலத்தில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மேலும் கோவை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த வாரம் கேரள முதலமைச்சர் அலுவலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட 5 இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் மற்றும் மாநகர போலீசார் இணைந்து தனிப்படை அமைத்து கடந்த ஒருவார காலமாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் சேலம் ஓட்டலுக்கு மிரட்டல் விடுத்த செல்போன் எண் எங்கு உள்ளது என விசாரித்தனர். அந்த செல்போன் சேலம் அருகே உள்ள சித்தனூரை சேர்ந்த ராணி என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செல்போன் தொலைத்து போனதுகண்டுபிடிக்கப்பட்டது. பிறகு ராணியின் செல்போன் எங்கு உள்ளது என ஜிபிஆர்எஸ் கருவி மூலம் விசாரணை செய்தனர். அப்போது, சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள ஜிஆர்டி ஓட்டலில் இருப்பது தெரியவந்தது.

இதனை அறிந்த தனிப்படை போலீசார் நேற்று ஜிஆர்டி ஓட்டலுக்கு சென்று கண்காணித்தனர். இதையடுத்து, சேலம் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த பிரேம்ராஜ் என்பவரை சேலம் தனிப்படையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விமானப்படை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் நடத்தி வந்த முந்திரி வியாபாரத்தில் இழப்பு ஏற்பட்டதாகவும், அந்த கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டதாகவும் இதனால் அதிருப்தியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயற்சி செய்ததாகவும் கூறியிருக்கிறார்.


Tags : First Minister ,Kerala ,Police Action , Kerala Chief Minister's Office, bomb threat, arrest
× RELATED இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள்...