×

100 யூனிட்டுக்குள் உபயோகிப்பதால் தென்மாவட்டங்களில் 10.41 லட்சம் வீடுகளுக்கு மின் கட்டணம் இல்லை: 87 ஆயிரம் பேர் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துகின்றனர்

நெல்லை: நெல்லை உள்ளிட்ட 5 தென் மாவட்டங்களில் வீடுகளுக்கு இணைப்பு பெற்ற 10 லட்சத்து 41 ஆயிரம் குடும்பங்கள் 100 யூனிட்டுக்குள் மின்சாரத்தை பயன்படுத்துவதால் அவர்களுக்கு ஆண்டு முழுவதும் மின்கட்டணம் பில் வருவதில்லை. அதே நேரத்தில் 87 ஆயிரம் பேர் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவதால் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் எகிறுகிறது.மின்சாரம் மனித வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. பஞ்சபூதங்களுக்கு அடுத்த 6வதாக மின்சாரம் பயன்படுகிறது. குடிசை வீடாக இருந்தாலும் மாளிகையாக இருந்தாலும் தொடர்ச்சியாக 15 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டால் பொறுமை இழக்கிறோம். வீடுகளில் மின் இணைப்பை பயன்படுத்துபவர்களுக்கு மின்வாரியம் 4 வகையான கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. இதில் இரு மாதங்களுக்கு, முதல் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை. 101 முதல் 200 யூனிட் உபயோகிப்பவர்களுக்கு குறிப்பிட்ட கட்டணமும், 201 முதல் 500 யூனிட் வரை உபயோகிப்பவர்களுக்கு குறிப்பிட்ட கட்டணமும், 501 யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு ஒரு கட்டணமுமாக மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது.

இந்த அட்டவணைப்படி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 தென் மாவட்டங்களில் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்று பயன்படுத்துபவர்களின் பயன்பாடு குறித்த புள்ளி விபரங்கள் தெரியவந்துள்ளது. இந்த 5 மாவட்டங்களில் 28 லட்சத்து 24 ஆயிரத்து 737 பேர் வீட்டு பயன்பாட்டிற்கு மின்சார இணைப்பு பெற்றுள்ளனர். கடந்த மார்ச், ஏப்ரல் மாத கணக்கீட்டின்படி 4 விதமான கட்டணங்களில் உள்ளவர்களில் முழுக்க முழுக்க இலவச எல்லைக்குள் மின்சாரத்தை உபயோகித்து பயனடைபவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.அதாவது 5 மாவட்டங்களையும் சேர்த்து 10 லட்சத்து 41 ஆயிரத்து 275 பேர் பூஜ்யம் முதல் 100 யூனிட்டுக்குள் மட்டும் தங்களது 2 மாத மின்சார தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர். இதனால் இவர்களுக்கு ஆண்டு முழுவதும் மின்சார கட்டணமே வருவதில்லை.200 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 71 ஆயிரத்து 131 ஆக உள்ளது. 201 முதல் 500 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துபவர்கள் 8 லட்சத்து 25 ஆயிரத்து 176 ஆக உள்ளனர். 87 ஆயிரத்து 155 பேர் மட்டுமே 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்துகின்றனர். மின்பயன்பாடு அளவு 501 யூனிட்டை தாண்டினால் அவர்களுக்கு வரும் பில் கட்டணம் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும் என மின்துறையினர் தெரிவிக்கின்றனர். ஏசி அதிகம் பயன்படுத்துபவர்கள் மற்றும் மின் மோட்டார் போன்ற அதிக மின் சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துபவர்களுக்குதான் மின்கட்டணம் எகிறுகிறது என தெரியவந்துள்ளது.

வீடுகளுக்கான மின் கட்டணம் அதிகரித்து விட்டது என சிலர் அவ்வப்போது பொருமுகின்றனர். மின்கட்டணம் என்பது அவரவர் பயன்படுத்திய மின்சார அளவிற்கேற்பவே நிர்ணயிக்கப்படுகிறது. 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரத்தை உபயோகப்படுத்துபவர்களுக்கு கண்டிப்பாக மின் கட்டணம் அதிகரிக்கத்தான் செய்யும். அவர்களாகவே மின்சார பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் மட்டுமே மின்கட்டணம் குறையும். தென்மாவட்டங்களில் சராசரியாக 87 ஆயிரத்து 155 குடும்பங்களே 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள 16 லட்சத்து 96 ஆயிரத்து 307 குடும்பங்கள் 101 முதல் 500 யூனிட் வரையே மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு மின் கட்டணம் அதிகம் வருவதற்கு வாய்ப்பில்லை. வீட்டில் மின்சப்ளை இல்லை என்றால் ஓரு 15 நிமிடம் கூட மின்சாரம் இல்லாமல் மக்களால் இருக்க முடியவில்லை. இன்றையை காலகட்டத்தில் மின்வாரியம் நான்கு மாதத்திற்கு பிறகு கணக்கீட்டு பணி செய்தாலும் கூட, இரண்டாக பிரித்து தான் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலகில் எந்த பொருளையும் விற்பனை செய்தவுடன் விற்பனையான பொருளுக்கான தொகை வசூல் செய்யப்படும். சிலவற்றில் பொருளை விற்பனை செய்வதற்கு முன்பே அதற்கான தொகை வசூல் செய்யப்படும். ஆனால் மின்சாரத்தை வினியோகம் செய்து, 60  நாட்கள் கழித்து தான் உபயோகப்படுத்திய மின்சாரத்துக்குரிய கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

கோடை காலம் மற்றும் கொரோனா நேர ஊரடங்கால் வீட்டில் இருக்கும் போது மின்சாரத்தின் தேவை அதிகமாகத்தான் இருக்கும். கணக்கீடு பணி செய்யாத காலத்தில் அதற்கு முந்தைய மாத கணக்கீடு தொகைதான் வசூல் செய்யப்பட்டது. அந்த தொகையையும் உடனே செலுத்த சொல்லி நிர்ப்பந்திக்கவில்லை. மூன்று மாதங்களுக்கு மேலாக மின் துண்டிப்பும் செய்யவில்லை. ஏற்கனவே மின்வாரியம் கடனில் தத்தளிக்கும் நிலையிலும் மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு எல்லா இடர்பாடு நேரங்களிலும் மின் ஊழியர்கள் சிரமம் பார்க்காமல் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

500
யூனிட்டிற்கு மேல் மின்சாரத்தை  உபயோகப்படுத்துபவர்களுக்கு கண்டிப்பாக மின் கட்டணம் அதிகரிக்கத்தான் செய்யும். அவர்களாகவே மின்சார பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் மட்டுமே  மின்கட்டணம் குறையும். தென்மாவட்டங்களில் சராசரியாக 87 ஆயிரத்து 155  குடும்பங்களே 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர்.

Tags : Thenmavattam , Because used within 100 units 10.41 lakh households in the southern districts have no electricity bill: 87 thousand people use more than 500 units
× RELATED கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு...