×

குஞ்சிபாளையம் கிராமத்தில் மயானம் அருகே குப்பையில் தீ வைப்பதால் சுகாதார சீர்கேடு: மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, மயானத்தில் குப்பைகள் கொட்டி தீ வைக்கப்படுவதால் மூச்சுத்திணறல் மற்றும் சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.பொள்ளாச்சி  அருகே உள்ள குஞ்சிபாளையம் கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்திலிருந்து சுமார் 500 மீட்டர்  தொலையில் மயானம் உள்ளது. இந்த மயானத்தின் ஒரு பகுதியில்,  ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் சேகரிக்கப்படும்  குப்பைக்கழிவுகள், கொட்டி செல்லப்படுகிறது. மேலும், அவ்வப்போது தீ வைத்து  எரிப்பதால்  அந்த வழியாக செல்வோர் அவதிப்படுகின்றனர்.சில நேரத்தில், மயானத்தில் உள்ள குப்பையில் எரிந்து வெளியேறும்  புகையானது, பலத்த  காற்றுக்கு கிராமத்தை நோக்கி வருவதால் வயதானோர், உடல் நிலை  பாதிக்கப்பட்டோர் மூச்சுத்திணறல் உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்படுகின்றனர். அதிலும் கடந்த சில மாதமாக, இந்த  மையத்தில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவது அதிகரித்துள்ளது. மேலும் அருகே  உள்ள தனியார் தொழிற்சாலைகளிலிருந்து பழைய டயர்கள் மற்றும் குப்பைகள்  கொட்டப்படும் செயல் அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம்,  குப்பையில் எரிந்த தீயிலிருந்து வெளியேறிய புகையானது பரவலாக சென்றது.  இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர். மயானத்தில் குப்பைகள் கொட்டி தீ  வைப்பதை தவிர்த்து, வெகுதூரத்துக்கு தனி குப்பை கிடங்கு ஏற்படுத்த வேண்டும்  என பேரூராட்சி நிர்வாகத்தினரிடம், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை  விடுத்துள்ளனர். ஆனால், அற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காததால்  அப்பகுதியில் வேதனையடைந்துள்ளனர். இது குறித்து குஞ்சிபாளையம் கிராம  மக்கள்  கூறியதாவது: குஞ்சிபாளையம் அருகே உள்ள மயானத்தில் கடந்த  5 ஆண்டுகளுக்கு மேலாக, குப்பைக்கழிவு கொட்டப்படுவது அதிகரித்துள்ளது.  அதிலும், வெளியிலிருந்து இரவு நேரத்தில், மருத்துவக்கழிவு,  இறைச்சிக்கழிவுகளையும்  கொட்டுவதால், சுகாதார சீர்கேடு  ஏற்பட்டு தொற்று நோய் ஏற்படும் அவலம் உண்டாகிறது. கழிவுகளை கொட்டுபவர்கள்  மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், கண்டும் காணாததுபோல்  இருப்பதாக தெரிகிறது. எனவே, குஞ்சிபாளையம் கிராமம் அருகே உள்ள மயாத்தில்  குப்பைகள் கொட்டுவதையும், தீ வைப்பதையும்  தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Kunchipalayam , In the village of Kunchipalayam In the trash near the cemetery Health Disorder due to fire: Public suffering due to suffocation
× RELATED குஞ்சிபாளையம் கிராமத்தில் மயானம்...