×

தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை சில்லரை வியாபாரத்திற்கு தடை: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியின்றி மக்கள் அதிக அளவில் கூடுவதால், ஞாயிற்றுக்கிழமை சில்லரை வியாபாரத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா 3-ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 5ம் தேதி முதல் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்துக்கடை தவிர அனைத்து மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், பேக்கரி உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. மேலும், திருப்பூர் மாநகரத்தில் வணிக பகுதிகளில் இயங்கும் பால், மருந்துக்கடை, மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள், உணவு பொருட்கள், இறைச்சி, கோழி, மீன் விற்பனையை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (8ம் தேதி) திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட் காலை 6 மணிக்கு பின் செயல்பட போலீசார் அனுமதி வழங்கவில்லை. மார்க்கெட்டுக்கு மக்கள் வர முடியாமல், தடுப்பு ஏற்படுத்தினர். இதையடுத்து வியாபாரிகள் மீன்களை விற்பனை செய்ய தெற்குதோட்டம், ஏ.பி.டி., ரோடு, ஜம்மனை ஓடை பகுதிக்கு ஆட்டோக்களில் எடுத்துச் சென்றனர். மீன் வாங்க வந்தவர்கள் வாகனத்தின் பின்பே சென்று, முண்டியடித்து மீன் வாங்கி சென்றனர். இது ஒருபுறமிருக்க, சில்லறை வியாபாரிகள், ‘ரோட்டோரத்தில் குப்பை கொட்டிய இடத்தில் ஈக்கள், கொசுக்கள் நிறைந்திருக்கும் இடத்தில், மீன்களை விற்றனர். பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி கொரோனா தொற்றை வரவேற்கும் விதத்தில் கூட்டம், கூட்டமாக நின்று மீன்களை வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த புகாரையடுத்து, தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை சில்லரை வியாபாரம் செய்ய மாநகராட்சி மற்றும் போலீசார் தடை விதித்துள்ளனர்.இதுகுறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அறியும் வகையில், மார்க்கெட் நுழைவு வாயில் முன்பு கொரோனா பெருந்தொற்று அதிகரிப்பதால் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் சில்லரை வியாபாரம் நடைபெறாது. மொத்த வியாபாரத்திற்கு மட்டும் அனுமதி என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.



Tags : Thennapalayam ,market ,Corporation , Thennapalayam Fish Market Sunday Retail Ban: Corporation Administration Announcement
× RELATED முத்துப்பேட்டை வார சந்தை அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்