×

மதுரை கோட்டத்தில் குமரியை இணைக்கவேண்டும்: மத்திய அமைச்சரை சந்தித்து விஜய்வசந்த் எம்.பி மனு

நாகர்கோவில் : விஜய் வசந்த் எம்.பி மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து குமரி மாவட்ட மக்கள் மற்றும் ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
ரயில்வே வாரியத்தின் திட்டத்தின்படி கன்னியாகுமரி மாவட்டத்தின் கீழ் வரும் அனைத்து ரயில் பாதைகளும் மதுரை கோட்டத்தில் இணைத்திட வேண்டும். திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் (தினசரி இரவு) திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட வேண்டும். நாகர்கோவில் - தாம்பரம், நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாகவும் கூடுதல் ரயில்களாகவும் மாற்றப்பட வேண்டும். சார்மினார் எக்ஸ்பிரஸ் சென்னை - ஹைதராபாத் மற்றும் சென்னை - புதுடெல்லி  ஜிடி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட வேண்டும். இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் மற்றும் இரணியல், குழித்துறை ரயில் நிலையங்களில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி - காந்திதம் ஹம்ஸபர் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி - ஜாம்நகர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - விவேக் திப்ருகர், நாகர்கோவில் - ஷாலிமார் குருதேவ் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி - பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களுக்கு நிறுத்தங்கள் அனுமதிக்க வேண்டும்.

கன்னியாகுமரி - மும்பை மற்றும் கன்னியாகுமரி - கத்ரா விரைவு ரயில்கள் கொங்கன் வழியாக திருப்பி விடப்பட வேண்டும். கன்னியாகுமரி - திப்ருகர் எக்ஸ்பிரஸ் மதுரை மற்றும் சென்னை வழியாக திசைதிருப்புதல் வேண்டும். திருநெல்வேலி - பிலாஸ்பூர் மற்றும் நாகர்கோவில் - ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொச்சுவேளியில் தினசரி ரயிலாக இயக்க வேண்டும். திருவனந்தபுரம்-கன்னியாகுமரி- திருநெல்வேலியில் இருந்து தினமும் நான்கு மெமு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். நாகர்கோவில் - மங்களூர் எரநாடு எக்ஸ்பிரஸ், மங்களூர் - மட்கான் எக்ஸ்பிரஸ் இணைப்பதன் மூலம் கன்னியாகுமரி - வாஸ்கோடகாமா புதிய விரைவு ரயில் சேவை இயக்கப்பட வேண்டும். கன்னியாகுமரி - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக மாற்றப்பட வேண்டும். சென்னை - கன்னியாகுமரி இடையே ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் விரைவாக கொண்டு வர வேண்டும்.
கன்னியாகுமரி - திருவனந்தபுரம் பிரிவு பாதை மாற்றத்தின் போது இரணியல் மெயின் ரோடு அருகே உள்ள இரணியல் ரயில்வே வளாகத்தை இடமாற்றம் செய்து தரவேண்டும். குழித்துறை ரயில் நிலையத்தை மார்த்தாண்டம் ரயில் நிலையமாக பெயர் மாற்றிட வேண்டும் . கன்னியாகுமரி- திண்டுக்கல்- சபரிமலை புதிய அகல ரயில் பாதையாக அமைத்திட வேண்டும்.  கன்னியாகுமரி - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் எர்ணாகுளம், மங்களூர், மேட்கான் வழித்தடம் வழியாக விட வேண்டும்.  இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கப்பல் தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும்
விஜய் வசந்த் எம்.பி ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த அனிஷ் பீட்டர் மற்றும் இரு இந்தியர்கள் சீனாவில் இருந்து மே 19ம் தேதி புறப்பட்ட கப்பலில் தொழிலாளர்களாக பணியாற்றினர். இந்த கப்பல் மே மாதம் 20ம் தேதி இலங்கை அருகே தீ விபத்துக்குள்ளானது. கப்பலில் இருந்து மீட்கப்பட்ட அனிஷ் பீட்டர் உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு இங்கையில் உள்ள ஓட்டலில் தங்க வைத்துள்ளனர். இருப்பினும் இலங்கை அதிகாரிகள் விசாரணைக்காக என்று அவர்களை தொடர்ந்து சிறைப்படுத்தி வைத்துள்ளனர். கப்பலில் நடந்த தீ விபத்து சம்பவத்திற்கும், அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவருகிறது. எனவே மூன்று பேரையும் விடுவிக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Kumari ,Madurai ,Vijayvasant ,Union Minister , Kumari should be included in Madurai division: Vijayvasant MP's petition to meet Union Minister
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!