×

அதிமுக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்: மறைந்த அவைத் தலைவர் மதுசூதனனுக்கு இரங்கல் தீர்மானம்

சென்னை: மறைந்த கழக அவைத் தலைவர் மதுசூதனனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மகத்தான
மக்கள் தொண்டரையும், புரட்சித் தலைவர் மீது மாறாப் பற்றுகொண்ட மாவீரரையும் இழந்திருக்கிறது.  ஜெயலலிதா அவர்களின் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உரியவராய், அவர்களது வாழ்வில் இறுதி நிமிடம் வரை உறுதுணையாக இருந்தவர் கழக அவைத் தலைவர் மதுசூதனன். 1953-ஆம் ஆண்டு  எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினைத் தொடங்கி, அதனைத் தொடர்ந்து வட சென்னை பகுதியில் எம்.ஜி.ஆர். பெயரில் மன்றங்களை அமைத்து, சிறுவர்கள் படிக்கும் வண்ணம் எம்.ஜி.ஆர். பெயரில் இரவு பாடசாலைகளைத் தொடங்கி, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கழக உடன்பிறப்புகள் அனைவராலும் ``அஞ்சா நெஞ்சன்’’ என்று கம்பீரத்தோடு அழைக்கப்பட்ட  மதுசூதனன், வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், கழக கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு கழகப் பொறுப்புகளில் பணியாற்றி உள்ளதோடு; சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் மிகச் சிறந்த முறையில் மக்கள் பணியாற்றியவர்.  

மதுசூதனன் ஆற்றிய பணிகள், கழகம் என்னும் ஆலமரம் வேர் விட்டு வளர, ஊற்றப்பட்ட கொள்கை நீராகும் என்பதை பெருமிதத்துடன் நினைவு கொள்கிறோம்.  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக் காப்பதிலும், தொண்டர்களுக்காக வாழ்வதிலும்,  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில் நடைபோட்டு, மக்கள் தொண்டாற்றுவதிலும், நம் ஒவ்வொருவருக்கும் கழக அவைத் தலைவர் மதுசூதனன் காலமெல்லாம் எடுத்துக்காட்டாய்த் திகழ்வார் என்பது உறுதி.  கழகத்தின் மூத்த முன்னோடி, போற்றுதலுக்குரிய மதுசூதனன் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, இந்த இரங்கல் தீர்மானத்தை உளம் உருக நிறைவேற்றுகிறோம். கழக அவைத் தலைவர் மதுசூதனன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மவுனம் காத்தனர்.


Tags : Extreme Internal Electoral Consultative Meeting ,Madhasuthanni , AIADMK, condolences to Madhusudhanan, resolution
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...