×

தமிழக திருக்கோயில்களில் அன்னை தமிழ் மொழியில் அர்ச்சனைக்கு பொதுமக்களிடம் பெரிதும் வரவேற்பு : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று 11.08.2021 சென்னை தங்கசாலை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்தாவது, அந்தக் கோவில்களில் உள்ள தெப்பக்குளங்கள், பூங்காக்கள், திருத்தேர்கள் ஆகியவற்றை உரிய முறையில் பராமரிக்க உத்தரவிட்டார்,
     
அதன் பின் திருக்கோயில்களுக்கு வரும்  பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை  மேற்கொள்ளவும் உத்தரவிட்டார் .பாரிமுனை லிங்கி செட்டி தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 3420 சதுரடி உள்ள இடம் சிதிலமடைந்து கவனிப்பாரற்று கிடந்தது ,அதனை பார்வையிட்ட அமைச்சர் உடனடியாக அந்த இடத்தை சீரமைக்க உத்தரவிட்டார்.  

அதன் பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது தமிழக மக்களை காக்கின்ற பணியில் தமிழக முதல்வர் அவர்கள் எப்படி 24 மணி நேரமும் அயராது உழைத்து வருகிறாரோ,  அதேபோல் அவரது அறிவுரைப்படி இந்து சமய அறநிலையத் துறையும் 24 மணி நேரமும் செயலாற்றி வருகிறது .திமுக கழகம் ஆட்சி பொறுப்பேற்று கடந்த மூன்று மாதங்களில் இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள 80 திருக்கோயில்களின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இந்த ஆய்வின்போது திருக்கோவிலின் சொத்துக்கள் பல மீட்கப்பட்டுள்ளது. வாடகைகள் மற்றும் பயன்பாடற்ற நிலங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு அவற்றை முறைப்படுத்தி திருக்கோயில்களின் வருவாயை அதிகமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இவற்றில் குடமுழுக்கு செய்யப்பட்டு ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகள் முடிவுற்று அதன் பிறகு பத்தாண்டுகள் கழித்து, 5 ஆண்டுகள் கழித்தும் இதுவரை குடமுழுக்குசெய்யப்படாமல் நிலுவையில் உள்ள கோவில்களை ஆய்வு செய்து அந்த திருக்கோயில்கள் குடமுழுக்கு செய்வதற்கு பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் ஏற்கனவே கும்பாபிஷேக பணிகள் தொடங்கி ஐந்தாண்டுகள் ஆகியும், இன்னும் பணிகள் நிறைவுறாத நிலை உள்ளது அவற்றின் பணிகளை உடனடியாக விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளோம். அக்கோவில்களில் இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தி உள்ளோம்  .தற்போது இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,  கச்சாலீஸ்வரர் திருக்கோயில் ஆகிய இரண்டு கோவில்களும்  மடப்பள்ளி,  நந்தவனம்,  கோசாலைகள், திருதேர்கள், ஆகியவை முறையாக பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது .

மேலும் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் அர்ச்சகர்கள் வசித்துவரும் வீடுகள் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை இவை மிகவும் பழுதடைந்து உள்ளது . எனவே அந்த இடத்தில் புதிய குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் .அதேபோல்  மேற்கண்ட இரண்டு திருக்கோயிலும் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகள் முடிவுற்று உள்ளதால் இக்கோயில்கள் குடமுழுக்கு பணிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது .சமீபத்தில் தமிழக முதல்வர் அவர்களால் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் முதன்முறையாக தொடங்கி வைக்கப்பட்ட அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற சிறப்புமிக்க திட்டம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து தரப்பினரும் இத்திட்டத்தை பெரிதும் வரவேற்கிறார்கள். இதையடுத்து இத்திட்டம் முதல் கட்டமாக 47 முதுநிலை கோவில்களில் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .

கோவில் நிலங்களை பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன , அவ்வாறு கோவில் நிலங்களை யார் ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் .அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் அடிப்படையில்  இதுவரை 207 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இவர்களில் 35 வயதுக்கு மேற்பபட்டோர் சுமார் 75 பேர் உள்ளனர் அவர்கள் தவிர மீதி உள்ள அனைவரும் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு துணை அர்ச்சகர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வயது விலக்கு அளிப்பது குறித்த சட்ட வடிவம் கொண்டு வருவது குறித்து தமிழக முதல்வர் அவர்கள் முடிவெடுப்பார் .

தமிழக அரசு மக்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது தமிழக முதல்வர் யார் தவறு செய்திருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க நிச்சயம் தயங்குவதில்லை . அதன் அடிப்படையில்தான் கடந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட அமைச்சர்கள் மீது உரிய ஆதாரத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உப்பைத் தின்றவர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதுபோல தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் . அவர்கள் நிரபராதி என்றால் நீதிமன்றத்தில்  நிரூபித்துக் கொள்ளட்டும். இவ்வாறு அவர் கூறினார் .இந்த ஆய்வுகளின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., சென்னை மண்டல இணை ஆணையர் திருமதி சி.ஹரிப்ரியா மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Tags : Minister ,Sekarbapu , மு.க.ஸ்டாலின்
× RELATED 40க்கு 40 என்ற சபதத்தை முதல்வர்...