×

மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி பேச்சு பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு போதாது: 69 சதவீதமாக உயர்த்தக் கோரிக்கை

புதுடெல்லி: தமிழ்நாட்டில் அமலில் உள்ளது போல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை 69 சதவீதமாக உயர்த்தக் கோரியும், சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிடக் கோரியும் திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் வலியுறுத்தினார். மக்களவையில் அரசியலமைப்பு 127வது சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற மத்திய சென்னை மக்களவை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியதாவது: பிற்படுத்தப்பட்ட மக்கள் சந்திக்கின்ற பிரச்னைகள் குறித்தும், அவர்களின் முன்னேற்றம் குறித்தும் சுதந்திர இந்தியாவில் சிந்தித்து, முதல் முதலாக குரல் எழுப்பிய மாநிலம் தமிழ்நாடு. இட ஒதுக்கீடு விஷயத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.

ஏனெனில், கடந்த 1951ம் ஆண்டு இட ஒதுக்கீடு குறித்த முதல் அரசியலமைப்பு திருத்தச் சட்டம், தமிழ்நாட்டின் தலைவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. இன்று நாம் 127வது சட்டத்திருத்தம் பற்றியும், இட ஒதுக்கீடு பற்றியும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இந்த சூழல் ஏற்படுவதற்கு காரணமே, மத்தியில் ஆளும் பாஜ அரசுதான். ஒன்றிய அரசுக்கென தனிப்பட்ட அதிகாரங்கள் இல்லை, அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு தான் உள்ளது, மாநில அரசுகளுக்குதான் அதிகாரங்கள் பகிரப்பட்டிருப்பதாக என்.டி.ராமாராவ் கூறினார். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? அனைத்து அதிகாரங்களையும் பிரதமர், உள்துறை அமைச்சர் என நீங்களே மாநில அரசுகளின் உரிமையை பறித்து கொண்டீர்கள். இந்த விவகாரம் கூட சட்ட சிக்கல் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. ஆனால் அதற்கும் நீங்கள் தான் பெருமை தேடிக் கொள்ள முயற்சிக்கிறீர்கள்.

மறைந்த தலைவர் கலைஞர் மு. கருணாநிதி, மறைந்த பிரதமர் வி.பி.சிங், என். டி.ராமாராவ் மற்றும் தென்னிந்தியாவில் இருந்த அனைத்து தலைவர்களும் மண்டல் கமிஷனை அமல்படுத்த வலியுறுத்தினர். 1990ல், பிரதமர் வி.பி.சிங் அதை செயல்படுத்தினார். 1931ம் ஆண்டு சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், 80% க்கும் அதிகமான மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் அதன்பின், வி.பி.சிங் என்ன ஆனார்? அவரை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிந்தது யார்? அவரது அரசாங்கத்தை வீழ்த்தியது யார்? அனைத்திற்கும் காரணம் பாஜ தான், அவர் மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தியதால் தான். இதை நாம் மறக்க முடியாது.

2011ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்து, ஒரு சமூக பொருளாதார சாதிக் கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது. சாதி அடிப்படையிலான அந்தத் தரவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூட அருண் ஜெட்லி கூறினார். ஆனால் 2021ல் என்ன நடந்தது? நீங்கள் அத்தரவுகளை வெளியிட மறுத்து எஸ்சி. எஸ்டி. பிரிவினரின் தரவுகள் மட்டுமே வெளியிடப்படும் என்று பதிலளித்தீர்கள். சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை நீங்கள் வெளியிட வேண்டும். தமிழ்நாடு அரசும், தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து அதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த இட ஒதுக்கீட்டிற்கு நீங்கள் எப்படி பெருமை கொள்ள முடியும்? இதற்கான முழு பெருமையும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காக வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் பெற்ற தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையே சாரும். தேர்தல் வரும் போதெல்லாம் நீங்கள் வடிக்கும் முதலைக் கண்ணீரை கண்டு இந்திய மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவு, எனவே தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது போல 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி உறுதி செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்
தயாநிதிமாறன் எம்பி, நீட் தேர்வு குறித்து பேசுகையில், ‘‘கிராமப்புறங்களில் உள்ள எங்கள் சிறுமிகள் மற்றும் சிறுவர்களின் மருத்துவ கனவுகளை நீட் எனும் தேர்வு கொன்று வருகிறது. உங்கள் ஆணவத்தால் அவர்களுக்கு மருத்துவராகும் வாய்ப்பு கிடைப்பதில்லை. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு சிகிச்சையளித்த அனைத்து சிறந்த மருத்துவர்களும், நீட் மூலம் படித்த மருத்துவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் அனைவரும் சிறந்த மருத்துவர்களே! எனவே நீட் தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் மருத்துவம் படிக்க வழி செய்யுங்கள்’’ என்றார்.

Tags : Dayanidhi Maran ,Lok Sabha , Lok Sabha, Dayanidhi Maran MP, Reservation, Request
× RELATED இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற இந்தியா...