×

சென்னை, தூத்துக்குடி உட்பட இந்தியாவின் 12 முக்கிய நகரங்கள் 80 ஆண்டுகளில் கடலில் மூழ்கும்: நாசா எச்சரிக்கை

புதுடெல்லி:  சென்னை, தூத்துக்குடி உட்பட இந்தியாவில் 12 நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு  மையமான நாசா எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் உலகளவில் இயற்கை பேரழிவுகள் அதிகமாகி வருகின்றன. தற்போது ஏற்பட்டு வரும் காட்டுத் தீ, மழை, வெள்ளம், பனிமலைகள் உருகுதல் போன்வற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.  ஒரேநாள் மழையில் நகரங்கள் தத்தளிக்கும் அவலங்கள்,  இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் நடந்து வருகிறது. சீனாவில் சமீபத்தில் ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரேநாள் இரவில் மழை கொட்டி, நகரங்களில் வெள்ளம் ஓடியது.

இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால்  புவி வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், பனிப்பாறைகள், இமயமலை போன்ற பனிமலைகள் உருகி கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. உலகளவில் ஆண்டுக்கு 3.7 மிலி என்ற விகிதத்தில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக, சுற்றுச்சூழலுக்கு மக்களால் ஏற்பட்டு வரும் கெடுதல்கள் கூறப்படுகின்றன.

இதேநிலை தொடர்ந்தால், இந்தியாவின் கடலோரங்களில் உள்ள 12 முக்கிய நகரங்களின் பெரும்பகுதி 2100க்குள் கடலில் 3 அடி வரையில் மூழ்கும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச குழுவின் ஆய்வு அறிக்கை அடிப்படையில், இந்த எச்சரிக்கையை அது விடுத்துள்ளது.  இந்த பட்டியலில் சென்னையும், தூத்துக்குடி நகரமும் கூட இடம் பெற்றுள்ளன. சென்னை 1.87 அடியும், தூத்துக்குடி 1.9 அடியும் கடலில் மூழ்கும் என கணிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடலில் மூழ்கும் என கணிக்கப்பட்டுள்ள 12 நகரங்களின் விவரம் வருமாறு:
நகரம்            மாநிலம்        மூழ்கும் அளவு
மங்களூர்            கர்நாடகா        1.87 அடி
கொச்சி            கேரளா        2.32 அடி
பாரதீப்            ஒடிசா        1.93 அடி
கிதிர்பூர்            கொல்கத்தா    0.49 அடி
விசாகப்பட்டினம்        ஆந்திரா        1.77 அடி
சென்னை             தமிழ்நாடு        1.87 அடி
தூத்துக்குடி        தமிழ்நாடு        1.9 அடி
கண்ட்லா            குஜராத்        1.87 அடி
ஒக்ஹா            குஜராத்        1.96 அடி
பாவ்நகர்            குஜராத்        2.70 அடி
மும்பை            மகாராஷ்டிரா    1.90 அடி
மோர்முகாவ்        கோவா        2.06 அடி



Tags : Chennai ,Thoothukudi ,NASA , Chennai, Thoothukudi, India, NASA warning
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...