×

12ம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்த நிலையில் லடாக் எல்லையில் மீண்டும் படைகளை குவிக்கும் சீனா

புதுடெல்லி: பேச்சுவார்த்தைக்கு பின் படைகளை விலக்கி கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு, லடாக் மற்றும் காஷ்மீர் எல்லையில் டாங்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் சீன ராணுவம் முகாமிட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.கடந்தாண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் எல்லை பகுதி கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் அத்துமீறியதால், இருநாட்டு வீரர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டு கைக்கலப்பானது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரும், சீன வீரர்கள் 45 பேரும் உயிரிழந்தனர். இதனால், எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. வரலாறு காணாத வகையில் இருநாட்டு ராணுவ வீரர்களும் எல்லையில் ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டதால், போர் மூளும் சூழல் ஏற்பட்டது.

எல்லையில் அமைதி திரும்ப இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் 12 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின், பதற்றமாக பகுதிகளில் குவிக்கப்பட்ட ராணுவ வீரர்களை விலக்கி கொள்ள ஒப்புகொண்டு திரும்ப பெற்றனர். இந்த மாதம் முதல் வாரத்தில் நடந்த 12ம் கட்ட பேச்சுவார்த்தையில் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து படைகளை விலக்கி கொள்ள முடிவு எடுக்கப்பட்டு, படைகள் வாபஸ் பெறப்பட்டன. இந்நிலையில், படைகளை திரும்ப பெற்றதாக கூறப்படும், பாங்காங் திசோ, கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் சீன ராணுவம்  டாங்கி, ராக்கெட் லாஞ்சர்கள், ெஹலிகாப்டர்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் மீண்டும் முன்னேறி வருவது எல்லையில் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

இதேபோல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு நெருக்கமாக உள்ள சிக்கின்காங் அல்லது ஜிங்ஜியாங் பகுதியில், பீரங்கி படைகளும், போர் ஹெலிகாப்டர்களும், ஏராளமான வீரர்களுடன் நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை எல்லையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வரும் இந்திய ராணுவம், எதையும் சமாளிக்க முழு வீச்சில் தயாராகி வருகிறது.


Tags : China ,Ladakh border , Phase 12 talks, Ladakh border, China
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...