ஆகஸ்ட் 13ம் தேதி முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை பேரவை கூட்டம் 29 நாள் நடக்கிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம், வருகிற 13ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடருடன் ஆரம்பித்து செப்டம்பர் 21ம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள்  நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மு.அப்பாவு கூறினார். தமிழக அரசின் 2021-22ம் ஆண்டு திருத்திய நிதி நிலை அறிக்கை வரும் 13ம் தேதி (வெள்ளி) சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, பாமக சார்பில் ஜி.கே.மணி, பாஜ சார்பில் நயினார் நாகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் சிந்தனைசெல்வன், இந்திய கம்யூனிஸ்ட் தளி ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் நாகை மாலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதிமுக சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.

இந்த கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் மு.அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13ம் தேதி துவங்குகிறது. அன்று காலை 10 மணிக்கு 2021-22ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார். 14ம்தேதி வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். வரும் திங்கட்கிழமை முதல் 19ம்தேதி வரை நிதி நிலை அறிக்கை மீது விவாதம் நடைபெறும். 19ம் தேதி நிதி அமைச்சர், வேளாண் அமைச்சர் பொது விவாதத்துக்கு பதில் அளித்து பேசுவார்கள். தமிழக சட்டப் பேரவையில் முதன்முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பட்ஜெட் படிக்க படிக்க அந்த திரையில் தெரியும். இதற்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

இதற்கு முன்பு இமாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டப் பேரவையில் இதுபோன்ற இ-பட்ஜெட் நடைமுறைகள் உள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக இ-பட்ஜெட் முறை பயன்படுத்தப்பட உள்ளது. சட்டப் பேரவையில் இன்னும் துறை வாரியான கேள்விகள் வராத காரணத்தினால் கேள்வி பதில் நடைபெறாது. தேவைப்பட்டால், பின்னர் கேள்வி நேரம் குறித்து முடிவு செய்யப்படும். பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை முடிந்ததும்,  வருகிற 23ம் தேதி முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை மானிய கோரிக்கைகள் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உடன் இருந்தார்.

* தேதி வாரியாக துறைகள் விவாதம்

23ம் தேதி    நீர்வளத்துறை,

24ம் தேதி    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

25ம் தேதி    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

26ம் தேதி    கூட்டுறவு மற்றும் உணவு துறை

27ம் தேதி    உயர்கல்வித்துறை, பள்ளிகல்வித்துறை

28ம் தேதி    நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை

31ம்தேதி    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை, பால்வளத்துறை

செப்.1ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை

2ம் தேதி    தொழில்துறை, தமிழ்வளர்ச்சி துறை

3ம் தேதி    வீட்டுவசதித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை

4ம் தேதி    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

6ம் தேதி    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

7ம் தேதி    வனத்துறை, சுற்றுச்சூழல் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை

8ம் தேதி    இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை

9ம் தேதி    கைத்தறித்துறை, கதர் துறை, வணிகவரித்துறை, முத்திரைத்தாள் மற்றும் பதிவுத்துறை

13ம் தேதி    எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை

14ம் தேதி    பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

15ம் தேதி    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

16ம் தேதி    நீதி நிர்வாகம், சிறைகள், சட்டத்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, எழுதுபொருள் மற்றும் அச்சு துறை

17ம் தேதி    போக்குவரத்துத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை

18ம் தேதி    காவல் மற்றும் உள்துறை, தீயணைப்பு துறை

20ம் தேதி    காவல், உள்துறை, தீயணைப்பு துறை ஆகிய துறை விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுறை அளிப்பார். நிதித்துறை, சிறப்பு முயற்சிகள் துறை, மனிதவள மேலாண்மை துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வு கால நன்மைகள் குறித்து  விவாதம்

21ம் தேதி    பொதுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, அரசின் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதல். ஆகஸ்ட் 29, 30, செப்டம்பர் 5, 10, 11, 12, 19 ஆகிய தேதிகள் அரசு விடுமுறை நாட்கள்.

Related Stories:

More
>