திருச்சுழி அருகே 13ம் நூற்றாண்டு கற்சிலைகள் கண்டெடுப்பு

திருச்சுழி: திருச்சுழி அருகே கண்டெடுக்கப்பட்ட 13ம் நூற்றாண்டு கற்சிலைகளை, அதிகாரிகள் எடுத்து செல்ல விடாமல் கிராம மக்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மிதலை குளத்தை சேர்ந்தவர் சாமி கிழவன். இவர் தனது தரிசு நிலத்தை கடந்த சில நாட்களாக ஜேசிபி மூலம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது மண்ணில் புதைந்த நிலையில் சுமார் 2 அடி உயரமுள்ள பெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி ஆகிய 3 சிலைகள் இருந்தன. பின்னர் கிராம மக்கள் சிலைகளை அங்கேயே சுத்தம் செய்து, அபிஷேகம் செய்து வழிபட துவங்கினர். தகவலறிந்து திருச்சுழி தாசில்தார் முத்துகிருஷ்ணன், விருதுநகர் அருங்காட்சியகம் காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள், இன்ஸ்பெக்டர் நிதிக்குமார் ஆகியோர் நேற்று வந்து சிலைகளை பார்த்தனர்.

அப்போது அவை 13ம் நூற்றாண்டை சேர்ந்த கற்சிலைகள் என தெரிந்தது. பின்னர் சிலைகளை மீட்டு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க முடிவு செய்தனர். ஆனால் அதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவின்பேரில் திருச்சுழி ஒன்றிய தலைவர் பொன்னுத்தம்பி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் 3 சிலைகளையும் பெற்று திருச்சுழி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

Related Stories: