×

எளாவூர் சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 30 கிலோ வெள்ளி, ரூ.19 லட்சம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சோதனை சாவடியில் போலீசார் நடத்திய சோதனையில், 30 கிலோ வெள்ளி பொருட்கள், 19 லட்ச ரூபாய் பிடிபட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இதன் வழியாக ஆந்திரா, டெல்லி, ஹரியானா, பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஆட்டோ மொபைல்ஸ் உதிரிபாகங்கள் மற்றும் பழங்கள், காய்கறிகள் ஏற்றிக்கொண்டு சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திண்டிவனம், திருவண்ணாமலை, பெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் வருகிறது. இதுதவிர கஞ்சா, செம்மரக்கட்டை, அபின், போதை மாத்திரைகள், குட்கா போதை பொருட்களும் கடத்திவரப்படுகிறது. இவற்றை அடிக்கடி போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

வழக்கம்போல் இன்று அதிகாலை 1 மணி அளவில், ஆரம்பாக்கம் தனிப்பிரிவு காவலர் நாராயணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த சொகுசு காரை மறித்தபோது சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் போய் நின்றது. இதையடுத்து அந்த காரில் போலீசார் சோதனை நடத்தியபோது 30கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 19 லட்ச ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார்  (49) என்பவரிடம் விசாரித்தபோது விற்பனைக்கு கொண்டுசெல்லப்படுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லை என்றதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அருண்குமார் மற்றும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி பொருட்கள், 19 லட்சம் பணத்தை ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுபற்றி வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Andhra ,Elavur , 30 kg silver, Rs 19 lakh seized in Elavur, Andhra Pradesh
× RELATED ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட 10...