×

பல கோடி ரூபாய் மிரட்டி பணம் பறித்த வழக்கு மாஜி போலீஸ் கமிஷனருக்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ்: மும்பை காவல்துறை அதிரடி நடவடிக்கை

மும்பை: பல கோடி ரூபாய் மிரட்டி பணம் பறித்த வழக்கில் தொடர்புடைய மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனருக்கு எதிராக ‘லுக்அவுட்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ்  அம்பானியின் அடுக்குமாடி குடியிருப்பு அருகே வெடிபொருள்களில் நிரப்பப்படும்  20 ஜெலட்டின் குச்சிகளுடன் நிறுத்தப்பட்ட காரை கடந்த பிப்ரவரி 25ம் தேதி  காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தின் உரிமையாளா் சடலம் ஓா்  ஓடையிலிருந்து மீட்கப்பட்டது. தொடர் விசாரணையில் பல காவல்துறை அதிகாரிகள்,  காவலா்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து மும்பை காவல்  ஆணையராக இருந்த பரம்வீர் சிங் ஊா்க்காவல் படை டிஜிபியாக பணியிட மாற்றம்  செய்யப்பட்டார்.

அதன் பின்னர் மும்பையில் உள்ள உணவகங்கள், மதுபானக்  கூடங்களில் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்துத் தருமாறு  காவல்துறை அதிகாரிகளிடம் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக்  வலியுறுத்தியதாக மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு பரம்வீா் சிங்  கடிதம் எழுதினார். இது அந்த மாநிலத்தில் பலத்த சா்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பரம்வீர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது மற்றுமின்றி அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டன. இந்த நிலையில், கடந்த வாரம் தானே நகர கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் கேத்தன் தன்னா என்பவா் அளித்த புகாரின்படி, பரம்வீா் சிங் மும்பை ஆணையராக இருந்த போது ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டியதாக தெரிவித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் பரம்வீர் சிங், துணை காவல் ஆணையா் தீபக் தேவ்ராஜ், உதவி காவல் ஆணையர் என்.டி.கடம், முன்னாள் காவல்துறை அதிகாரி பிரதீப் சா்மா உள்பட 28 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்தொடர்ச்சியாக பரம்பீர் சிங் மற்றும் மற்றொரு மூத்த டிசிபியான ஐபிஎஸ் அதிகாரி ஆகியோருக்கு எதிராக மிரட்டி பணம் பறித்த வழக்கில் ‘லுக்அவுட்’ நோட்டீஸ் (குற்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர், சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு பயணம் செல்வதோ அல்லது வெளி நாட்டிலிருந்து உள்நாட்டிற்கு வருவதை தடுக்கும் நோக்கத்துடன், இந்தியக் காவல் துறையால் விடுக்கப்படும் சுற்றறிக்கையாகும் வழங்கப்பட்டுள்ளது. மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் மேற்கண்ட அதிகாரிகள் மீது ஏற்கனவே இரண்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Maji Police ,Commissioner ,Mumbai Police Action Action , Crores of rupees, money, ex-police, commissioner, ‘lookout’
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...