மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இனிமேல்... 75 வயதை தாண்டினால் ‘பொலிட்பீரோ’ உறுப்பினர் பதவி கிடையாது: கேரள முதல்வர் பினராயிக்கு சிக்கல்

புதுடெல்லி: சிபிஐ (எம்) கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களின் வயது வரம்பை 80 ஆண்டுகளில் இருந்து 75 ஆண்டுகளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், கேரள முதல்வர் பினராயி விஜயன் ‘பொலிட்பீரோ’ உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்றக்கூடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கூட்டம் கடந்த 6 முதல் 8ம் தேதி வரை டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சிபிஐ (எம்) கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களின் வயது வரம்பை 80  ஆண்டுகளில் இருந்து 75 ஆண்டுகளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் 23வது மாநாடு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேரளா மாநிலம் கண்ணூரில் நடைபெறும். அங்கு இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முன்னதாக கடந்த 2018 ஏப்ரல் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில், தற்போதைய மத்திய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போதைய 17 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய குழு மூத்த உறுப்பினரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இடம்பெற்றுள்ளார். அவருக்கு தற்போது 76 வயதாகிறது. புதிய நடைமுறை அமலுக்கு வரும்பட்சத்தில், அவர் ‘பொலிட்பீரோ’ உறுப்பினர் (அரசியல் தலைமை குழு) பதவியில் இருந்து வெளியேற்றக்கூடும். இதுகுறித்து சிபிஐ-எம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், ‘75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்களை மத்திய குழுவிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

மத்தியக் குழு உறுப்பினர் பதவிக்கான வயது உச்ச வரம்பை 80 வயதிலிருந்து 75 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  கடந்த முறை சில முக்கிய பொறுப்புகளை வகிக்கும் நபர்களுக்கு மட்டும் வயது உச்சவரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. கட்சியின் மாநில குழுவைப் பொருத்தவரை, பொதுவாக குறைந்த வயது உச்ச வரம்பையே உறுப்பினர்களுக்கு நிா்ணயித்துள்ளனர். மேலும், அதுகுறித்து அவர்களே தீர்மானித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories:

>