×

லக்னோவில் பிட்னஸ் சென்டர் நடத்தி ஏமாற்றிய விவகாரம் ஷில்பா, தாய் சுனந்தா மீது மோசடி வழக்கு: நோட்டீசுக்கு பதில் அளிக்காததால் லக்னோ போலீஸ் மும்பை விரைவு

லக்னோ: லக்னோவில் பிட்னஸ் சென்டர் நடத்தி பல கோடி ரூபாய் ஏமாற்றிய வழக்கில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது தாய் சுனந்தா மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த லக்னோ போலீசார் மும்பை விரைந்துள்ளனர். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ எடுத்து பதிவேற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜ் குந்த்ராவின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது தாயார் சுனந்தா மீதும் லக்னோ போலீசார் இரண்டு மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஷில்பா ஷெட்டி சார்பில் ‘லோசிஸ் வெல்னஸ் சென்டர்’ என்ற பெயரில் நாடு முழுவதும் பிட்னஸ் சென்டர் திறந்து கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளார்.

அதன்பிறகு தொழில் முடங்கியது. இவ்விவகாரம் தொடர்பாக, லக்னோவை சேர்ந்த ஜோத்ஜனா சவுகான், ரோஹித் வீர் சிங் ஆகியோர் ஷில்பா ஷெட்டியிடம், பிட்னஸ் சென்டர் கிளைகளை தொடங்க கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும், ஆனால் கிளைகள் தொடங்கப்படவே இல்லை, அதோடு ஷில்பாஷெட்டி பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை எனக் கூறி போலீசில் புகார் அளித்தனர். அதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஷில்பா ஷெட்டி ஆரம்பித்த கம்பெனியில் ஷில்பா தலைவராகவும், அவரது தாயார் இயக்குநராகவும் இருந்தனர்’ என்றனர்.  இதுகுறித்து லக்னோ கிழக்கு பகுதி டிஜிபி சஞ்சீவ் அளித்த பேட்டியில், ‘லக்னோவில் உள்ள ஐயோசிஸ் ஸ்லிமிங் ஸ்கின் சலூன் மற்றும் ஸ்பா ஆரோக்கிய மையம் என்ற பெயரில் ஷில்பா, அவரின் தாயார் சுனந்தா ஆகியோர் பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்த விசாரணை அதிகாரிகள் குழு மும்பை சென்றுள்ளது.  பல கோடி ரூபாய் மோசடி வழக்கு என்பதால் அனைத்து கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் மற்றும் விபூதிகண்ட் காவல் நிலையங்களில் அவர்கள் இருவர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.  இருவருக்கும் ஒரு மாதத்திற்கு முன்பே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால், நோட்டீஸின் பதிலைப் பெறுவதற்காக, விபூதிக்கண்ட் காவல்துறையினர் மும்பை சென்றுள்ளனர்’ என்றார். ஏற்கனவே ஷில்பாவின் கணவர் ராஜ்குந்த்ரா சிறையில் உள்ள நிலையில், தற்போது ஷில்பா மற்றும் அவரது தாயாரிடம் மற்றொரு மோசடியில் வழக்கில் போலீசார் விசாரணை தொடங்கியுள்ளதால், இவர்கள் இருவரும் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Shilpa ,Sunanda ,Lucknow ,Mumbai , Fitness Center, Shilpa, Thai Sunanda, fraud
× RELATED சுநந்தாபீடம் – சுநந்தா