புஜாராவுக்கு பதில் சூர்யகுமார் யாதவ்: ஆஸி. வீரர் பிராட்ஹாக் யோசனை

லண்டன்:இந்திய டெஸ்ட் வீரர் சேத்தேஸ்வர் புஜாரா, 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரு சதம் கூட எடுக்கவில்லை. சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டரான இவர் ரன்களை குவிக்கத் திணறி வருகிறார். இவரது தன்னம்பிக்கை முன்புபோல் இல்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 8, 15 என்ற சொற்ப ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால், இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் தனது திறமையை நிரூபிக்கும் கட்டாயத்தில் இருந்தார். ஆனால் அங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் 16 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.

இதனால் இரண்டாவது டெஸ்டில் இவரை களமிறக்கக் கூடாது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக், இனி புஜாராவை நம்பி பயனில்லை எனத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “இந்திய அணிக்கு ஓபனருக்கான இடம்தான் பிரச்சினையாக இருந்தது. கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி அந்த பிரச்சினையை தீர்த்துவிட்டார். தற்போது அடுத்த பிரச்சினை புஜாராவால்தான் ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் தனது திறமையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மோசமான ஷாட்கள் ஆடி ஆட்டமிழந்தார். அவரிடம் முன்புபோல் தெளிவு இல்லை எனக் கருதுகிறேன். இதனால், அவருக்கு மாற்றாக மூன்றாவது இடத்தில் சூர்யகுமாரை களமிறக்க வேண்டும்.

இவர் புதுமுக வீரர் என நினைத்து சிறப்பாக ஆடமாட்டார் என நினைக்கக் கூடாது. சாம்கரன், ஒல்லி ராபின்சன் ஆகியோர் டெஸ்டிற்கு புதுமுக வீரர்கள்தான். இவர்களைப்போல், சூர்யகுமாரும் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. உள்நாடு, வெளிநாடு பிட்ச் என்ற வேறுபாடு சூர்யகுமாரை பாதிக்காது. அவரால் சிறப்பாக விளையாட முடியும்” என நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>