×

சோமலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலை சீரமைப்பு பணிகள் நடப்பது எப்போது?

*ஆக்கிரமிப்பை அகற்றாததால் 8 மாதமாக பணிகள் கிடப்பு

சின்னாளபட்டி : கன்னிவாடி சோமலிங்கேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் சாலையை சீரமைக்க ரூ.65 லட்சம் ஒதுக்கீடு செய்தும், 8 மாதங்களாக பணிகள் நடக்காததால் பக்தர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு பகுதியில் சோமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு செல்லும் சாலையை கடந்த 10 வருடங்களாக புதுப்பிக்கவில்லை. இதனால் பக்தர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் கன்னிவாடி பேரூராட்சி நிர்வாகம் சார்பாக நபார்டு திட்டம் 2020-21 மூலம் 1.5 கி.மீ. தூரத்திற்கு தார்ச்சாலை அமைத்துக்கொடுக்க ரூ.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் மனு கொடுத்தும், வருவாய்த்துறை அதிகாரிகள், நில அளவையர்கள் (சர்வேயர்) கண்டுகொள்ளாததால் இன்றுவரை தார்ச்சாலை அமைக்க முடியவில்லை. இதனால் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் விவசாயிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை திண்டுக்கல் மேற்கு தாலுகா தாசில்தாரிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் பொதுமக்கள் கன்னிவாடியில் உள்ள வருவாய்த்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கன்னிவாடி பேரூர் திமுக செயலாளர் சண்முகம் கூறுகையில், பலமுறை வருவாய்த்துறை அதிகாரியிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. நில அளவையர்களும் வருவதில்லை. இதனால் சோமலிங்கேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் பாதையில் தார்ச்சாலை அமைக்க முடியவில்லை. திண்டுக்கல் மேற்கு தாசில்தார் தகுந்த நடவடிக்கை எடுத்து நில அளவையர்களை உடனடியாக அனுப்பி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றார்.

Tags : Somalingeswarar Temple , Allocating Rs. 65 lakhs to renovate the road leading to Kanniwadi Somalingeswarar temple
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதியில்...