×

மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறை-விழிப்புணர்வு முகாமில் விவசாயிகளுக்கு ஆலோசனை

தஞ்சை : தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டாரத்தில் குலமங்கலம், ஒக்கநாடு மேலையூர், ஒக்கநாடு கீழையூர், சமையன்குடிகாடு, வன்னிப்பட்டு, வடசேரி, திருமங்கலக்கோட்டை, ஈச்சங்கோட்டை, நடுவூர் ஆகிய பகுதிகளில் மரவள்ளி பயிர் 200 எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மரவள்ளி பயிரில் மாவுப் பூச்சியின் தாக்குதல் ஆங்காங்கே தென்பட தொடங்கியுள்ளது.

மாவுப்பூச்சியின் தாக்குதலுக்கு உள்ளான செடிகளின் இலைகள் உருமாறி, வளர்ச்சி குன்றி, பந்து போன்று செடியின் நுனியில் காணப்படும். இலைகள் முழுவதும் வெள்ளை நிற பூச்சிகள் அடர்த்தியாக காணப்படும். இலைகளை தொட்டு அமிழ்த்தி பார்க்கும்போது பிசின் போன்ற திரவம் பூச்சிகளிலிருந்து வெளிப்படும். இதனால் தாக்குதலுக்கு உள்ளான செடிகளில் மகசூல் வெகுவாக பாதிக்கப்படும்.

எனவே இப்பூச்சிகள் தாக்கிய செடிகளின் நுனிக்குருத்துக்களை அகற்ற வேண்டும். மாவுப்பூச்சியால் பாதிக்கப்பட்ட காய்ந்த செடிகளை சேகரித்து அழிக்க வேண்டும். இப்பூச்சிகள் பாதிப்பின் ஆரம்ப நிலையில் அசாடிராக்ட்டின் 0.15% 5மி.லி. மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர், மீன் எண்ணெய் ரெசின் சோப்பு 2மி.லி. ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மேலும் 25 டபிள்யுஜி 5 கிராம் 10 லிட்டர் தண்ணீர் அல்லது பிலோனிக்கமைட் 50 டபிள்யுஜி 3மி.லி. 10 லிட்டர் தண்ணீர் அல்லது ஸ்பைரோடேட்ராமேட் 150 ஓடி 1.25 மி.லி. 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் பூச்சிக்கொல்லிகளை ஏதேனும் ஒன்றை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.

மரவள்ளியில் மாவுப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஒரத்தநாடு வட்டார விவசாயிகளுக்கு ஒரத்தநாடு வட்டார தோட்டக்கலை அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மேலும் தோட்டக்கலை உதவி இயக்குனர் சாந்திபிரியா 94889 45801, துணை தோட்டக்கலை அலுவலர் லோகேந்திரன் 63828 70020 உதவி அலுவலர்கள் செந்தில்குமார் 9751004252, கண்ணன் 90807 35406, கருணாநிதி 84894 40669, ஈஸ்வரி 82208 79515 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Tags : Method-Awareness Camp , Tanjore: Kulamangalam, Okkanadu Melayur, Okkanadu Keezhiyoor, Samayankudikadu, Vannipattu in Orathanadu area in Tanjore district.
× RELATED மெரினா கடற்கரையில் திருட்டு; 2...