திருப்பத்தூர் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை ரயில் நிலையம், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டிதீர்த்தது. இதன்காரணமாக வீடுகள் மற்றும் ரயில் நிலையங்களில் மழைவெள்ளம் புகுந்தது. விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் புழுக்கத்தில் தவித்து வந்தனர். அதேபோல் நேற்றும் வெயில் கொளுத்தியது. நள்ளிரவு 12 மணியளவில் திருப்பத்தூர், கந்திலி, குரிசிலாப்பட்டு, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய பெய்த பலத்த மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள 4 பிளாட்பாரங்களிலும் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியது. சுமார் 3 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் தேங்கியது. இதனால் இன்று அதிகாலை 5 மணிக்கு செல்லும் சென்னை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மழைநீர் வடிந்த பின்னர் சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு காலதாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. அதேபோல் ஜோலார்பேட்டை புதுஓட்டல் தெரு, சின்னகம்மியம்பட்டு, பெரிய கம்மியம்பட்டு, ஏலகிரி, பொன்னேரி, மண்டலவாடி, குண்ணத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. புதுஓட்டல் தெருவில் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.ஏலகிரிமலைக்கு செல்லும் பாதையில் உள்ள 3 மற்றும் 9வது கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன. மரங்களும் முறிந்தன. இதனால் இன்று காலை மலைபாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து வனத்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் உருண்டு விழுந்த பாறாங்கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. அதேபோல் ஜலகாம்பாறை அருவியில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிக்கு செல்லும் பாதைகள் முழுவதும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மலையடிவாரத்தில் உள்ள விநாயகர் கோயில், முருகன் கோயில் வரை உள்ள பகுதிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. இதனால் ெநல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

Related Stories:

More