×

மாதனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அப்பளம் போல் நொறுங்கிய காரில் சிக்கியவர்களை கடப்பாரையால் மீட்ட பொதுமக்கள்-சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்

ஆம்பூர் : மாதனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், அப்பளம் போல் நொறுங்கிய காரில் சிக்கியவர்களை கடப்பாரை கொண்டு பொதுமக்கள் மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கூத்தம்பாக்கம் அருகே சோதனைச்சாவடி உள்ளது. இந்த சாலையில் நேற்று வேலூரில் இருந்து மாதனூர் நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

அப்போது, கார் சோதனை சாவடியை தாண்டி சிறிதுதூரம் சென்றது. அப்போது எதிர் பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரி மீது கார் மோதியது.
இந்த விபத்தினால் சாலையில் பயங்கர சத்தத்துடன், கார் அப்பளம் போல் நொறுங்கியது. கார் விபத்துக்குள்ளானதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், காரில் இருந்தவர்களை மீட்க ஓடிச்சென்றனர். அப்போது, காரில் பயணம் செய்த 2 ஆண்களில் ஒருவர் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால், காரை ஓட்டி வந்த மற்றொருவர் அப்பளம்போல் நொறுங்கிய காரில் இருந்து வெளிய வரமுடியாமல் சிக்கிக்கொண்டார்.

உடனே அப்பகுதிமக்கள் அருகே இருந்த வீடுகளுக்கு சென்று கடப்பாரை உள்ளிட்ட மீட்பு கருவிகளை கொண்டு வந்து காரில் சிக்கியவரை  சுமார் அரை மணி நேரம் போராடி மீட்டனர்.
விபத்து நடந்து சுமார் அரை மணிநேரமாகியும் நெடுஞ்சாலை துறை ரோந்து பணியினர், ஆம்பூர் தாலுகா போலீசார் யாரும் அங்கு வராததால், கார் விபத்தில் சிக்கியவர்களை பொதுமக்களே மீட்டு ஆம்பூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தினர். விபத்தில் சிக்கியவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. விபத்தில் சிக்கியவர்களை பொதுமக்கள் மீட்ட வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : National Highway ,Mathanur , Ambur: On the National Highway near Madhanur, the civilians rescued those trapped in a wrecked car.
× RELATED உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலை தப்ரானி...