×

வணிகர்களுக்கு தற்காலிக மாற்று இடங்கள் வழங்க நடவடிக்கை பாளை காந்தி மார்க்கெட்டில் 440 கடைகள் கட்ட ஏற்பாடு-வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படுகிறது

நெல்லை : ஸ்மார்ட்  சிட்டி திட்டத்தின்கீழ்  பாளை காந்தி மார்க்கெட் பகுதியில் 440 கடைகள்,  வாகன நிறுத்தம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக அங்குள்ள  வணிகர்கள் உள்ளிட்டவர்களுக்கு தற்காலிக மாற்று இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.நெல்லை  மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள்  நடைபெற்று வருகின்றன. பாளை பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், சந்திப்பு  பஸ்நிலையம் ஆகியவை புதியதாக மாற்றி கட்டப்படுகின்றன.

மேலும்  பொருட்காட்சி மைதானத்தில் பிரம்மாண்ட வர்த்தக வளாகம், நேருபூங்கா  சீரமைப்பு, டவுன் மார்க்கெட் சீரமைப்பு, பாளை  வஉசி மைதானம் சீரமைப்பு,  நயினார்குளத்தில் தீம் பார்க், நவீன டிஜிட்டல் பஸ் நிறுத்தங்கள், நவீன  தெருவிளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பாளை  காந்தி மார்க்கெட் வளாகத்தையும் இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் புதிய சந்தை  அமைக்கப்பட உள்ளது.

 பாளை மார்க்கெட் வளாகத்தில் உள்ள ஒரு ஓட்டலில்  தொடங்கி கோ-ஆப்டெக்ஸ் கட்டிடம் வரை முழுமையாக இடித்து அகற்றிவிட்டு 3  அடுக்கு கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இதில் கீழ் தளத்தில்  வாகன நிறுத்தமும். முதல் மற்றும் 2ம் தளத்தில் கடைகளும் அமைக்கப்பட உள்ளன.  மொத்தம் 440 கடைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நவீன கழிப்பறை,  குளியலறை உள்ளிட் பல்வேறு வசதிகளும் செய்யப்பட உள்ளன. இதற்காக தற்போது  மார்க்கெட் வளாகத்தில் உள்ள வணிகர்களுக்கு பழைய போலீஸ் குடியிருப்பு  மைதானத்திலும், ஜவஹர் திடல் பகுதியிலும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட உள்ளன.

பழைய போலீஸ் குடியிருப்பு வளாக மைதானப் பகுதியில் காய்கனி மற்றும்  பலசரக்கு உள்ளிட்ட உணவு பொருள் தொடர்பான கடைகளுக்கும் ஜவஹர் மைதான  வளாகத்தில் ஜவுளி, பாத்திரம் உள்ளிட்ட பிற வணிக கடைகள் அமைக்கவும் தற்காலிக  கடைகள் அமைக்கப்பட உள்ளன.

மேலும் வாடகை வாகனங்களை தற்காலிகமாக  சமாதானபுரம் பகுதியில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜவஹர் திடல் பகுதியை  ஒதுக்கினால் தசரா போன்ற பண்டிகை பாதிக்கப்படும் என சிலர் எதிர்ப்பு  தெரிவிக்கும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி  வருகிறது.

பேச்சுவார்த்தையில் விரைவில் சுமூக தீர்வு  எட்டப்பட்டு முதற்கட்டமாக தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தொடங்க முடிவு  செய்துள்ளனர். வியாபாரிகள் முழுமையாக கடைகளை மாற்றிய பின்னர் பழைய கட்டிடம்  இடிக்கப்பட்டு பின்னர் புதிய கட்டிடம் அமைக்கும் பணி உடனடியாக தொடங்க  திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Pali Gandhi Marketplace , Nellai: Under the Smart City project, 440 shops, including a parking lot, are to be set up in the Palai Gandhi Market area. For this
× RELATED இந்து மத சடங்குகளின்றி நடைபெறும்...