பெகாசஸ் செயலி விவகாரத்தில் ஒட்டுமொத்த அமைச்சகங்களின் சார்பில் பதிலளிக்க வேண்டிய பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்?: ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: பெகாசஸ் செயலி விவகாரத்தில் ஒட்டுமொத்த அமைச்சகங்களின் சார்பில் பதிலளிக்க வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி மௌனம் சாதிப்பது ஏன்? என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், பிரபலங்கள் உளவு பார்க்கப்பட்டதாக கடந்த மாதம் வெளியான தகவல் பூதாகாரமாகின. உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் செல்ஃபோன் எண்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த விவகாரத்தை கடந்த 3 வாரங்களாக நாடாளுமன்றத்தில் எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணை குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் பெகாசஸ் செயலி விவகாரத்தில் ஒட்டுமொத்த அமைச்சகங்களின் சார்பில் பதிலளிக்க வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி மௌனம் ஏன்? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரள எம்.பி. ஒருவரின் கேள்விக்கு ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. தொடர்ந்து, பெகாசஸ் செயலியை வழங்கும் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் மேற்கொள்ளவில்லை என பாதுகாப்புத்துறை பதில் அளித்தாலும், ஒட்டுமொத்த அமைச்சகங்கள் சார்பில் ஒன்றிய அரசு பதில் கூற மறுப்பது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பெகாசஸ் விவகாரத்தால் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 16 நாட்களாக முடக்கப்பட்டுள்ளது. இன்று இதுகுறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>