×

கொரோனா காலத்தில் மட்டும் தனிக்கொள்ளை; மொத்தமாக ரூ.10,000 கோடி கொள்ளை அடித்து இருப்பார் எஸ்.பி.வேலுமணி : கார்த்திகேய சிவசேனாபதி கருத்து

அன்னூர்: அதிமுக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது வரவேற்கத்தக்கது என்று கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார். கோவையில் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 35 இடங்கள், சென்னையில் 16 இடங்கள் மற்றும் திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா 1 இடம் உட்பட மொத்தம் 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சராக இருந்தபோது முறைகேடாக டெண்டர் ஒதுக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. சேப்பாக்கம் எம்.எல்.ஏ விடுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து எஸ்.பி. வேலுமணி, அவரது உறவினர்கள், பங்குதாரர்கள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்புள்ள, தமிழ்நாடு முழுவதும் 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள், பங்குதாரர்கள் என மொத்தம் 17 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு என்பதையும் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.
அத்துடன், அநீதி வீழும், அறம் வெல்லும் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், கொரோனாவை வைத்து அடித்த கொள்ளையே தனி கொள்ளை, தனியாக ரூ.10,000 கோடி கொள்ளை அடித்து இருப்பார் . எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவது வரவேற்கத்தக்கது” என்றார்.

Tags : SB ,Velumani ,Karthikeya Sivasenapathy , கார்த்திகேய சிவசேனாபதி
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...