×

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக புகார் கூறப்பட்டது. இதையடுத்து வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனிடையே ஒப்பந்தப்பணி தருவதாக ரூ.1.25 கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சென்னை காவல் ஆணையரிடம் நேற்று ஒப்பந்தக்காரர் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சென்னை, கோவை, காஞ்சிபுரம், திண்டுக்கல்லில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் 35 இடங்களிலும் சென்னையில் 15 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் தலா 1 இடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை கோடம்பாக்கத்தில் வேலுமணியில் நெருங்கிய நம்பர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. கோவை மதுக்கரையில் உள்ள வேலுமணி உறவினரான பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகராஜா வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை சுகுணாபுரத்தில் உள்ள வேலுமணி வீட்டில் காலை 6 மணியில் இருந்து சோதனை நடைபெற்று வருகிறது. வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையை அடுத்து வேலுமணி வீட்டின் முன்பு அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. இதனிடையே சென்னை உள்ளிட்ட இடங்களில் 2014 முதல் 2018 வரை நடந்த பல்வேறு திட்டப்பணிகளில் முறைகேடு என்று புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள், பங்குதாரர்கள் என மொத்தம் 17 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. செந்தில் அண்ட் கோ பங்குதாரர் அன்பரசன், கே.சி.பி. என்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட், கே.சி.பி. என்ஜினீயர்ஸ் வேளாண் இயக்குனர் சந்திரபிரகாஷ், இயக்குனர் சந்திரசேகர், எஸ்.பி.பில்டர்ஸ் ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, சி.ஆர்.கன்ஷ்ட்ரக்ஷன், ராஜன் மற்றும் சில நிறுவனங்களின் பெயர்கள் எப்.ஐ.ஆறில் சேர்க்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.464 கோடி ஊழல் செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : S. RB ,Langsa , AIADMK files case against 17 including former minister SB Velumani: Anti-bribery action ..!
× RELATED நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை