×

அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர்சூரப்பா மீதான விசாரணை அறிக்கை முதல்வரிடம் ஒப்படைப்பு: நீதிபதி கலையரசன் வழங்கினார்

சென்னை:  அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீது நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் சூரப்பா. இவர், பொறுப்பில் இருந்த காலக்கட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், விதியை மீறி சில நியமனங்கள் செய்யப்பட்டதாகவும், சூரப்பா மீது பல புகார்கள் வந்தன. அதன் பேரில் விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு ஆணையத்தை கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி  அரசு நியமனம் செய்தது.
அந்த குழு துணை வேந்தர் சூரப்பாவிடம் விசாரணை நடத்தி வந்தது. இதையடுத்து சூரப்பா சென்னையில் இருந்து வெளியேறக்கூடாது என்றும் தெரிவித்து  இருந்தனர். அவர் மீது புகார் அளித்தவர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் ஆகியோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. அதில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் பதவிக் காலம் கடந்த ஏப்ரல் 11ம் தேதியுடன் முடிந்தது. இருப்பினும் அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவுக்கு செல்லாமல் அவர் சென்னையில் தங்கியுள்ளார்.  அவரிடம் நேரடியாக விளக்கம் கேட்பதற்காக கடந்த மே 3ம் தேதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பி 7 நாட்களுக்குள் தனது விளக்கத்தை ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்படி, தனது வழக்கறிஞர் மூலம் சூரப்பா மே 11ம் தேதிக்குள் தனது  விளக்கத்தை தெரிவித்து இருந்தார். அதில்  தனது மீது தெரிவிக்கப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையில்லை, ஊழல் மற்றும் முறைகேடுகள் புகார்களை முற்றிலும் மறுப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இதற்கிடையே கொராேனா தொற்று காரணமாக விசாரணை ஆணையத்தின் காலத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டது.

கடந்த ஜூன் மாதம் இந்த  விசரணை முடிவுக்கு வந்த நிலையில் சூரப்பா மீது நடத்தப்பட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாக தெரிவித்து 100 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நீதிபதி கலையரசன் தயாரித்தார். பின்னர் அரசு அறிவித்தபடி இந்த அறிக்கையை முதல்வரிடம் ஒப்படைக்க, தேதி கேட்டு கடந்த ஜூன் மாதம் ஆணையத்தின் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. தொடர்ந்து, ஆகஸ்ட் 9ம் தேதி (நேற்று) முதல்வரை சந்திக்க தேதி வழங்கப்பட்டது. அதன்பேரில், விசாரணை  ஆணையத்தின் தலைவர் நீதிபதி கலையரசன் மற்றும் அதிகாரிகள் விசாரணை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம்  நேற்று வழங்கினர்.

Tags : Vice Chancellor ,Anna University ,Vendarsurappa ,Chief Minister ,Judge ,Kalaiyarasan , Anna University
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...