நுகர்வோரின் வசதிக்காக பால் அட்டைதாரர்களின் விவரங்களை சமர்ப்பிக்க மேலும் 3 மாத கால அவகாசம்: தொழில் விவரம், மாத வருமானம் என எதுவும் நிரப்ப வேண்டியதில்லை: ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: நுகர்வோரின் வசதிக்காக, பால் அட்டைதாரர்களின் விவரங்களை சமர்ப்பிக்க மேலும் 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: ஆவின் நிறுவனம் நுகர்வோர் சேவையில் எந்தவிதக் குறைபாடுகளும் இன்றி அனைவரும் பயன்பெறும் வகையில் சேவையாற்றிவருகின்றது. ஆவின் நுகர்வோர்கள் பால் அட்டை திட்டத்தின் கீழ் 4.5 லட்சம் உறுப்பினர்கள் பயனடைந்து வருகின்றனர்.  இத்திட்டத்தின் கீழ் நுகர்வோர்கள் மாதத் தொகையை முன்கூட்டியே செலுத்துவதால் ஆவின் நிர்வாகத்திற்கு முன்வைப்புத் தொகையாகப்  பெறப்பட்டு வருகின்றது.  இத்திட்டத்தின் கீழ் நுகர்வோர்களுக்கு 2 முதல் 3 வரை லிட்டருக்குக் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

மாதாந்திரப் பால் அட்டை பால் வாங்கும் நுகர்வோர்கள், தங்களுடைய பணியிட மாற்றம் மற்றும் இதர காரணங்களால் வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்று விடுகின்றனர். ஆனால் அவர்களுடைய பெயரிலேயே  சில பால் விநியோகம் செய்யும் நபர்கள் தொடர்ந்து மாதாந்திரப் பால் அட்டைகளைப் புதுப்பித்து வருகின்றனர். அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பால் ரொக்க விற்பனைக்கு அதாவது ரூ. 2 முதல் ரூ. 3 வரை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.  கடந்த மாதம் முதல் மேற்கண்ட நுகர்வோர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தற்போது 80,000 பால் அட்டைதாரர்கள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.  

இதனால் சுமார் 40,000 லிட்டர் பால் விற்பனையில் மாதம் 36 லட்சம் நஷ்டம் தவிர்க்கப்பட்டுள்ளது.  தற்போது நடைமுறையில் உள்ள படிவத்தில் கல்வித்தகுதி, தொழில் விவரம், மாத வருமானம், ஆதார் விவரம் எதுவும் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தற்போதுள்ள புதிய படிவம் தங்களின் பார்வைக்கு இத்துடன் இணைக்கப்படுகிறது. மேலும் நுகர்வோர்களின் வசதிக்காகப் பால் அட்டைதாரர்களின் விவரங்ககளை  சமர்ப்பிக்க மேலும் 3 மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே நுகர்வோர்கள் புதிய விண்ணப்பத்தில் தங்களின்  அடிப்படை விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பால் அட்டையைப் புதுப்பிக்கலாம். இவ்வாறு ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>