ஓபிசி பட்டியல் தயாரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் தரும் அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா தாக்கல்: மக்களவையில் இன்று விவாதம்

புதுடெல்லி: ஓபிசி பட்டியல் தயாரிக்கும் அதிகாரம் மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்கிட வகை செய்யும் 127வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் கடும் அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது இன்று விவாதம் நடக்க உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் 102வது திருத்தத்தின் மூலம், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (ஓபிசி) அடையாளம் காண்பதற்கு மாநில அரசுகளுக்கு இருந்த அதிகாரத்தை ஒன்றிய அரசு பறித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து ஓபிசி பட்டியலை தயாரிக்கும் அதிகாரத்தை மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்கிட, அரசியலமைப்பு 127வது சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர ஒன்றிய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மசோதா நடப்பு மழைக்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 19ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால  தொடர் பெகாசஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட விவகாரங்களால் 3 வாரங்களும் முடங்கியது. வரும் 13ம் தேதியுடன் கூட்டத் தொடர் நிறைவடைய உள்ள நிலையில், வார விடுமுறைக்கு பின்னர் கடைசி வார கூட்டத் தொடர் நேற்று மீண்டும் தொடங்கியது.

கூட்டத் தொடர் தொடங்கும் முன்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட், ஆர்ஜேடி, ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், உள்ளிட்ட 15 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், நாட்டின் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் கருதி, அரசியலமைப்பு 127வது சட்ட திருத்த மசோதாவுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தருவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இக்கூட்டத்தில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக அமளி ஏற்பட்டது. இதனால் நண்பகல் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனாவால், ஹோமியோபதி தேசிய ஆணைய சட்ட திருத்த மசோதா மற்றும் இந்திய மருத்துவ முறை தேசிய ஆணைய சட்ட திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்களை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சமூக நீதித் துறை அமைச்சர் வீரேந்திர குமார், அரசியலமைப்பு 127வது சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

அமளி நடக்கும் போது மசோதா தாக்கல் செய்வது அவை விதிமீறல் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் காங்கிரசின் ஆதிதர் ரஞ்சன் சவுத்ரி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் இந்த மசோதா தொடர்பாக விரிவான விவாதத்திற்கு அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் வீரேந்திர குமார் கூறினார். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியதும், அமளிக்கு நடுவே வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டு திருத்த மசோதா, வைப்புக்காப்பீடு மற்றும் கடன் உறுதிக் கழக திருத்த மசோதா, பழங்குடியினருக்கான அரசியலமைப்பு உத்தரவு திருத்த மசோதா ஆகியவை அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டன. பின்னர் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட அவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அரசியலமைப்பு 127வது சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் இன்று நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஏற்கனவே ஆதரவு தந்துள்ளதால், இன்று இந்த மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* தோசை சுடுவது போல் 10 நிமிடத்தில் 3 மசோதா

மக்களவையில் நேற்று அமளிக்கு இடையே 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தொடர் முழுவதிலும் அமளிக்கு இடையே தான் அனைத்து மசோதாக்களும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் அவையில் ஜனநாயக படுகொலை நடப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். ஆர்எஸ்பி கட்சியின் பிரேசந்திரன் எம்பி, ‘‘ஏதோ தோசை சுடுவது போல் 10 நிமிடத்தில் 3 மசோதாக்களை நிறைவேற்றுவது கடும் கண்டனத்துக்குரியது’’ என்றார். இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘‘நாள் முழுவதும் விவாதம் நடத்த நாங்கள் தயார். ஓபிசி அரசியலமைப்பு திருத்த மசோதா பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக கொண்டு வரப்பட்டதாகும். அதில் உங்களின் கோரிக்கையை ஏற்று விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது’’ என்றார்.

Related Stories: