×

இந்திய கால்பந்து அணிக்கு கொல்கத்தாவில் பயிற்சி முகாம்: ஆக.15ல் தொடக்கம்

புதுடெல்லி: சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய கால்பந்து அணிக்கான 2 வார பயிற்சி முகாம் கொல்கத்தாவில் ஆக.15ம் தேதி தொடங்குகிறது. கத்தாரில் ஜூன் மாதம்  நடந்த உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் தோற்ற இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. கத்தாரில் 2022ல் நடைபெற உள்ள பிபா உலக கோப்பை தொடரின் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தாலும் வங்கதேசத்தை வீழ்த்தியதுடன், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டிரா செய்ததால் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை இந்திய அணி தக்கவைத்துள்ளது.

இந்நிலையில், இந்திய அணி ஆக.30, செப்.7ம் தேதிகளில்  நட்புரீதியிலான 2 சர்வதேச ஆட்டங்களில் விளையாடுகிறது. தொடர்ந்து அக்டோபர் மாதம் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரிலும், அதனை அடுத்து ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்கு தயாராகும் வகையில், இந்திய அணி வீரர்களுக்கான 15 நாள் சிறப்பு பயிற்சி முகாம் ஆக.15ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய அணிக்கான பயிற்சி முகாம் கொல்கத்தாவில் நடப்பது குறிப்பிடத்தக்கது. அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டீமாக்  மேற்பார்வையில் நடைபெறும் இந்த முகாமில் அனிருத் தாபா, ஹாலிசரண் நர்சாரி, ரகீம் அலி, கோல்கீப்பர் விஷால் கையத் உள்பட 23 வீரர்கள் முதல் நாளில் இருந்தே பங்கேற்கின்றனர்.

பெங்களூர் எப்சி அணிக்காக விளையாடும் கேப்டன் சுனில் செட்ரி, குருபிரீத்சிங் சாந்து, ஏடிகே மோகன் பகான் (கொல்கத்தா) அணிக்காக விளையாடும் அம்ரீந்தர் சிங், லிஸ்டன் கோலகோ உட்பட 13 பேர் பின்னர் அணியுடன் இணைவார்கள். பெங்களூரு, கொல்கத்தா அணிகள் ஏஎப்சி கிளப் அணிகளுக்கான தொடரில் விளையாட உள்ளதே இதற்கு காரணம். அந்த ஆட்டங்கள் மாலத்தீவு, இந்தியாவில் நடைபெறும். பயிற்சி முகாம் குறித்து அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு பொதுச் செயலாளர் குஷால் தாஸ் கூறுகையில் ‘இந்த பெருந்தொற்று காலத்தில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரியான கட்டுப்பாட்டுகள் உள்ளன. இந்த ஆண்டு டிசம்பருக்குள் இந்தியா 6 சர்வதேச ஆட்டங்களில் விளையாட உள்ளது. அதற்கு ஏற்ப சிறப்பாக தயாராக, தேவையான பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்’ என்றார்.

Tags : Indian football ,Kolkata , Training camp for Indian football team in Kolkata: Starting Aug. 15
× RELATED கொல்கத்தா லக்னோ மோதல்: 4வது வெற்றி யாருக்கு?