×

எல்லை பிரச்னை தீர்க்கப்படாத நிலையில் விமானப் படை வீரர்கள் எங்கும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்: தென்மண்டல தலைமை தளபதி அறிவுரை

தஞ்சை: எல்லை பிரச்னை தீர்க்கப்படாத நிலையில், விமானப் படை வீரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் என்று தஞ்சை விமானபடை நிலையத்தில் தென்மண்டல தலைமை தளபதி மந்வேந்திரசிங் கூறினார். தஞ்சை விமானப்படை நிலையத்துக்கு இந்திய விமானப்படையின் தென் மண்டல தலைமை தளபதி மன்வேந்திரசிங் 2 நாள் பயணமாக நேற்றுமுன்தினம் வந்தார். இவரை, தஞ்சை விமானப்படை நிலைய தளபதி ராம் வரவேற்றார். மேலும், தென் மண்டல தலைமை தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது, விமானப்படை வீரர்களிடம் தென் மண்டல தலைமை தளபதி மன்வேந்திரசிங் பேசும்போது, கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவ நிவாரண பொருட்கள், ஆக்சிஜன் கொள்கலன்களை வினியோகம் செய்வதற்காக இந்த நிலைய வீரர்கள் மேற்கொண்ட சிறப்பான பணி பாராட்டத்தக்கது.

மேலும், இந்த நிலையத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, கொரோனா சூழ்நிலையை சிறப்பாக நிர்வகித்தது பாராட்டுக்குரியது. கிழக்கு மற்றும் மேற்கத்திய கடற்பரப்பில் இந்திய விமானப்படையும், அமெரிக்க கடற்படையும் இணைந்து மேற்கொண்ட பன்னாட்டு கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதில் முன்னிலை வகித்த இந்த நிலைய வீரர்களை பாராட்டுகிறேன். இந்த நிலைய பணியாளர்கள் எந்த நிலையிலும் தயாராக இருக்க வேண்டும். எல்லை பிரச்னை தீர்க்கப்படாத நிலையில், விமானப் படை வீரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பணியாற்றுவதற்கான திறன், நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றார். பின்னர், நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை ஆய்வு செய்தார்.

Tags : Southzone ,Chief Commander , Air Force personnel should be prepared to serve anywhere if the border issue remains unresolved: Southern Commander-in-Chief Advice
× RELATED பெண்அக்னி வீரர்கள் பலம் 1,000ஐ தாண்டி உள்ளது: கடற்படை தலைமை தளபதி தகவல்