×

மகாராஷ்டிராவில் ஒருவார இடைவெளியில் ‘ஹெர்பெஸ்’ வைரஸ் தாக்கி 2 யானை பலி: கேரளா, நாக்பூருக்கு உடல் உறுப்பு மாதிரி அனுப்பிவைப்பு

கட்சிரோலி: மகாராஷ்டிராவில் ‘ஹெர்பெஸ்’ வைரஸ் தொற்று தாக்கி இரண்டு யானைகள் பலியாகி உள்ளன. அதன் உடல் உறுப்பு மாதிரிகள் கேரளா மற்றும் நாக்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்ட வன நிர்வாகத்தின் பராமரிப்பில் கமலாப்பூரில் யானை முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் உள்ள யானைகளில் கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு யானைகள் இறந்துள்ளன. சாய் என்ற மூன்று வயது யானை கடந்த 3ம் தேதி இறந்தது. இந்த சம்பவத்துக்கு  ஒரு வாரம்  முன்னதாக அர்ஜூன் யானை இறந்தது. இறந்த யானைகளை 4 பேர் கொண்ட மருத்துவ குழு பிரேத பரிசோதனை செய்தது. இந்த யானைகள் திடீரென இறந்ததற்கான காரணம், ‘ஹெர்பெஸ் வைரஸ்’ எனத் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அர்ஜுன் மற்றும் சாய் ஆகிய இரு யானைகளும் ‘ஹெர்பெஸ்’ வைரஸ் தொற்று காரணமாக இருந்தன. பொதுவாக ஹெர்பெஸ் வைரஸ் தொற்றானது யானைகளை தாக்கும். அந்த நோயே யானைகளின் உடனடி இறப்புக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட யானைகள், தொற்று தாக்கப்பட்ட நேரத்தில் இருந்து 8 முதல் 24 மணி நேரத்தில் இறந்துவிடும். இந்த நோய் குட்டி யானைகளை பெரும்பாலும் பாதிக்கும். இரு யானைகள் முகாமில் இறந்துள்ளதால், வனத்துறை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரேத பரிசோதனையில் எடுக்கப்பட்ட உறுப்பு மாதிரிகள், நாக்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகம் மற்றும் ஹெர்பெஸ் லேப் பரிசோதனைக்காக கேரளாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : Maharashtra ,Kerala, Nagpur , Herpes virus kills 2 elephants in Maharashtra in one week: Organ transplant to Kerala, Nagpur
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...