×

நாடாளுமன்றத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு!!

டெல்லி : எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்றும் முடங்கியுள்ளன. மாநிலங்களவை இன்று காலை கூடியதும் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தின் 79வது ஆண்டு தினத்தை முன்னிட்டு விடுதலை போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா நாட்டு மக்களை பெருமை அடைய செய்துள்ளார் என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்று பெருமை சேர்த்த வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் வேளாண் சட்டங்கள், விலை வாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும் அதனை எப்போது எடுத்து கொள்வது என்பது பற்றி முடிவு செய்யலாம் என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

இதனால் அவை முதலில் நன்பகல் வரையிலும் பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக மக்களவையில் வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தைஒட்டி விடுதலை போராட்டத்தில் உயிர் தியாகம் புரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


Tags : White House ,Parliament ,Olympic , வெள்ளையனே வெளியேறு
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...