×

ஒன்றிய அரசின் கடல் சார் மீன்வள மசோதாவை கண்டித்து சென்னை, நெல்லை, தூத்துக்குடி, குமரியில் 20 ஆயிரம் மீனவர்கள் ஸ்டிரைக்..!

சென்னை: ஒன்றிய அரசின் கடல்சார் மீன்வள மசோதாவை கண்டித்து சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து விசைப்படகுகளும், நாட்டுப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தற்போது நடைபெற்று வரும் மழைகால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒன்றிய அரசு ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ள 21 மசோதாக்களில் ஒன்றான கடல் மீன்வள (ஒழுங்காற்று) மசோதா (2021) மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதாவின் படி மீனவர்கள் 12 கடல் மைலுக்கு உள்ளே மீன்பிடிக்க வேண்டும்; எந்த மீன்களை பிடிக்கச் செல்கிறோம் என்பதை கரையில் அதிகாரிகளிடம் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும். குறிப்பிட்ட மீன் வகை தவிர வேறு வகை மீன்களை மீனவர்கள் பிடித்திருந்தால் அவைகளை கடலிலேயே விட்டு விட வேண்டும். மீனவர்கள் சட்டத்திருத்த வரைவுகளை மீறி செயல்பட்டால் முதல் முறை அபராதமும், 2வது முறை அபராதத்துடன் கூடிய சிறை தண்டனையும், மூன்றாம் முறை மீறினால் படகு பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட மீனவர் மீண்டும் தொழில் செய்ய முடியாதபடி கடும் நடவடிக்கைகள் எடுக்க வழி வகுக்கிறது.

இது மீனவர்களை முற்றிலும் முடக்கிப் போடும் நடவடிக்கை என்று கூறி தமிழகம் முழுவதும் இன்று மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நொச்சிக்குப்பம் அருகே பல்வேறு மீனவர் அமைப்புகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக லைட் ஹவுஸ் அருகே வரை வந்தனர். அங்கு போலீசார் அவர்களை மறித்தனர். இதைத் தொடர்ந்து 30 நிமிடத்துக்கு மேல் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் நடத்தினர். சென்னையில் பல்வேறு மீனவர் பகுதிகளில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கடலோர கிராமங்களில் உள்ள 10 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நெல்லை கலெக்டரை சந்தித்து மனுவும் கொடுத்தனர். இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் படகுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இதேபோல் கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர் சங்கத்தினர் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மேலமணக்குடி ஆகிய மீனவ கிராமங்களில் உள்ள வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் போல் நாட்டு படகுகளும் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. கோவளம் புனித இஞ்ஞாசியார் ஆலய கொடிமரம் முன்பு மீனவர்கள் திரண்டு ஒன்றிய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு கோவளம் பங்கு தந்தை கிஷோர் தலைமை வகித்தார். துணை பங்கு தந்தை ஜார்ஜ்புஷ், பங்கு பேரவை துணை தலைவர் ஜூலியஸ், செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் ரெஜி, ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கிய சவுமியா, ஊராட்சி தலைவர் ஸ்டெனி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் பள்ளம் கடற்கரையில் மீனவ கிராம மக்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று மீன்வள மசோதாவை திரும்பி பெற கோரியும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்யும் மசோதாவை கொண்டு வரும் ஒன்றிய அரசை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது: இந்த மசோதா அமலுக்கு வந்தால் கடற்கரை பகுதிகள் பாரம்பரிய மீனவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு கார்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கப்படும். கார்பரேட் நிறுவனங்கள் வழங்கும் இடத்தில் மட்டுமே பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடிக்க முடியும் என்ற நிலை உருவாகும் என்றனர்.

Tags : Union Government ,Sri Lanka ,Chennai ,Paddy ,Amphetu ,Kumari ,Kumarai , 20 thousand fishermen strike in Chennai, Nellai, Thoothukudi and Kumari condemning the United States Marine Fisheries Bill ..!
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்