ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் அரசு பஸ்சில் பூ மூட்டைகளுக்கு ‘கூடுதல் கட்டணம்’

* நடுரோட்டில் விட்டுச்சென்ற டிரைவர்

* வியாபாரம் செய்ய முடியாமல் அவதி

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் அரசு பஸ்சில் பூ மூட்டைகளுக்கு ‘கூடுதல் கட்டணம்’ வசூலிப்பதை தட்டிக்கேட்ட வியாபாரிகளை நடுவழியில் டிரைவர் விட்டுச்சென்றார். இதனால், வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 15 கிராமங்களை உள்ளடக்கிய ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம், பால் உற்பத்தி, தெரு கடைகளில் வியாபாரம், பூ வியாபாரம் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றனர்.

மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய திருப்பத்தூரிலிருந்து ஏலகிரி மலைக்கு 3 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. மங்கலம், நிலாவூர், அத்தனாவூர் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகிறது. பல்வேறு தரப்பினர் விவசாய நிலங்களில் பூ உற்பத்தி செய்து காலையில் பஸ் மற்றும் வாகனங்களில் திருப்பத்தூர், வாணியம்பாடி ஆகிய பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு எடுத்துச்சென்று வியாபாரம் செய்கின்றனர்.

மங்கலம், தாயலூர், நிலாவூர், அத்தனாவூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து விவசாயிகள் அதிகாலையில் பூக்களை சிறு மூட்டைகளாக கட்டி அரசு பஸ்களில் லக்கேஜ்  கொடுத்து மார்க்கெட்டுக்கு எடுத்துச்சென்று வியாபாரம் செய்கின்றனர். மேலும், பூ மூட்டைகளை ஏற்றிச்செல்ல பஸ் டிரைவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக வியாபாரிகளிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருப்பத்தூரிலிருந்து மங்கலம் செல்லும் அரசு பஸ் 7.30 மணியளவில் மங்கலத்தில் இருந்து புறப்பட்டு நிலாவூர் கூட்ரோட்டில் வந்து நின்றது.

அப்போது, அங்கிருந்த வியாபாரிகள் தங்களது மூட்டைகளை பஸ்சில் ஏற்றினர். அப்போது, பஸ் டிரைவர் சிறிய மூட்டை, பெரிய மூட்டை என கணக்கிட்டு ஒவ்வொரு மூட்டைக்கும் இவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதிகமாக லக்கேஜ் கேட்கிறீர்களே? மேலும் இதற்கு டிக்கெட் கூட கொடுப்பதில்லை  என வியாபாரிகள் டிரைவரிடம் தட்டிகேட்டுள்ளனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த டிரைவர் அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் பேசி, பூ மூட்டைகளை ஏற்றிச் செல்லாமல் நடுரோட்டிலேயே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், ஒரு மணிநேரம் காத்திருந்து அத்தனூர் பஸ் நிறுத்தத்திற்கு பைக்கில் எடுத்துச்சென்று, தனியார் பஸ்சில் பூ மூட்டைகளை கொண்டு சென்றனர். ஒரு சிலர் குறிப்பிட்ட நேரத்திற்கு பூ மூட்டைகள் எடுத்துச் செல்லாததால் வியாபாரம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

தனியார் பஸ்சில் பூ மூட்டைகளுக்கு குறைவான கட்டணம் வசூலிப்பதாகவும், அதற்காக அவர்கள் டிக்கெட் கொடுப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், அரசு பஸ்சில் பூ மூட்டைகளுக்கு லக்கேஜ் கட்டணத்தை பெற்று டிக்கெட் வழங்குவதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வியாபாரிகளிடம் மூட்டைகளை ஏற்ற உரிய கட்டணத்தை நிர்ணயித்து அதற்கு லக்கேஜ் டிக்கெட் வழங்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் ஏறுவதை கவனிக்காத டிரைவர்கள்

ஏலகிரி மலையில் பயணிகள் பஸ்சில் ஏறுவதற்கு முன்னதாகவும் இறங்குவதற்கு பின்பும் ஆட்கள் ஏறினார்களா? இறங்கினார்ளா? என்பதை கவனிக்காமல் உடனே டிரைவர்கள் பஸ்சை எடுத்து விடுகின்றனர். இதனால், பஸ்சின் படிக்கெட்டில் இருந்து சிலர் விழுந்து படுகாயமடைந்துள்ளனர். எனவே, பயணிகள் பஸ்சில் ஏறுவது மற்றும் இறங்குவதை டிரைவர்கள் கவனிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>