பழநி-கொடைக்கானல் சாலையில் தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

பழநி : பழநி-கொடைக்கானல் சாலையில் பல இடங்களில் தடுப்புச் சுவர் இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. பெரிய அளவிலான அசாம்பாவிதங்கள் நடக்கும் முன்னே தடுப்புச்சுவர்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாதளங்களில் ஒன்று கொடைக்கானல். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள இந்நகருக்கு பழநி மற்றும் வத்தலக்குண்டு என 2 வழித்தடங்களில் செல்ல முடியும்.

இதில் பழநி வழித்தடம் 67 கிமீ தொலைவைக் கொண்டது. 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இச்சாலையில் சவரிக்காடு, கோம்பைக்காடு, மேல்பள்ளம் மற்றும் வடகவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் பெரும் பள்ளங்கள் உள்ளன.ஆனால், சாலையோரங்களில் தடுப்புகள் மற்றும் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி சுற்றுலா வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. மேலும், சாலையோரங்களில் செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளதால் எதிரே வாகனங்கள் வரும்போது ஒதுங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு பயணிகளுக்கு வசதியாக ஒளி எதிரொலிக்கும் ஸ்டிக்கர் சாலையோர தடுப்புகளில் அதிகளவு ஒட்ட வேண்டுமென்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில், பழநி-கொடைக்கானல் சாலையோரங்களில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, பெரிய அளவிலான அசாம்பாவிதங்கள் நடக்கும் முன்னே தடுப்புச்சுவர்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சாலையின் இடைப்பகுதியில் விபத்து ஏற்பட்டால் மீட்பு மற்றும் முதலுதவி சிகிச்சைக்கான வாகனங்கள் பழநி அல்லது கொடைக்கானலில் இருந்தே வர வேண்டி உள்ளது. இதனால் ஏற்படும் தாமதத்தால் உயிரிழப்பு அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, பழநி-கொடைக்கானல் சாலையில் இடைப்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் முதலுதவி மையம் அமைக்க வேண்டும், என்றார்.

Related Stories:

>